Published : 23 Mar 2015 04:38 PM
Last Updated : 23 Mar 2015 04:38 PM
சிட்னி ஆட்டக்களம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு இணங்க இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதியில் தனது பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஆஸ்திரேலிய அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா-இலங்கை அணிகள் சிட்னியில் மோதிய காலிறுதியில் இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற டுமினி ஹேட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.
இதனையடுத்து கிளென் மேக்ஸ்வெல் கூறும்போது, “நான் இந்தத் தொடரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளேன். கேப்டன் மைக்கேல் கிளார்க் என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறாரோ அதற்கேற்ப நான் செயல்பட்டு வருகிறேன்.
ஜான் டேவிசன் இடம் (ஆஸி. சுழற்பந்து பயிற்சியாளர்) நான் பேசினேன். அவர் எனது பந்துவீச்சு குறித்து நம்பிக்கை தெரிவித்தார். ரன் கட்டுப்படுத்தும் எனது பணியிலிருந்து சற்றே மேம்பட்டு ஒரு முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இந்தியாவுக்கு எதிராக செயலாற்ற விரும்புகிறேன். நான் இந்த விவகாரத்தில் கடுமையாக உழைத்து வருகிறேன். இன்னும் கொஞ்சம் ஆற்றலுடன் வீச முயற்சி செய்து வருகிறேன்.
வேகப்பந்து பின்னணியிலிருந்து வந்தவன் நான். ஒரு ஆஃப் ஸ்பின்னராக நான் கொஞ்சம் அதிக தூரம் வந்து பந்துவீசி வருகிறேன். அதனால் இம்முறை ரன் அப் கொஞ்சம் குறையும் என்று நினைக்கிறேன்.
எனது பந்துவீச்சு முன்னேற்றத்துக்காக அனைவரிடமும் நான் பேசி வருகிறேன். மாற்றங்கள் கைகொடுக்கும் என்று நம்புகிறென்” என்றார் கிளென் மேக்ஸ்வெல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT