Published : 23 Mar 2015 05:38 PM
Last Updated : 23 Mar 2015 05:38 PM
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் உலகக்கோப்பை அரையிறுதியில் ஆடும்போது நிச்சயம் இரு அணியினரிடையேயும் வார்த்தை மோதல்கள் ஏற்படும் என்கிறார் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஃபாக்னர்.
சிட்னி மைதானம் இந்திய-ஆஸ்திரேலியா வீரர்களிடையே நிகழும் வார்த்தைப் போர்களுக்கு புகழ்பெற்றது. 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸ் மற்றும் ஹர்பஜன் சிங் இடையே நடைபெற்ற வார்த்தைப் போர் பிரசித்தி பெற்றது. ஹர்பஜன் சிங் மீது 3 போட்டிகள் தடை விழுந்தது. ஆனால் இந்திய அணியினர் தொடரை ரத்து செய்வோம் என்ற விதத்தில் மிரட்டியதையடுத்து தடை நீக்கபப்ட்டது.
அப்போது முதலே இந்திய-ஆஸ்திரேலிய அணியினரிடையே ரத்தக் கொதிப்பு அதிகரித்து வருவதை நாம் பல போட்டிகளில் பார்த்து வருகிறோம்.
இந்த முறை நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் விராட் கோலி, மிட்செல் ஜான்சன், மிட்செல் ஸ்டார்க், இசாந்த் சர்மா, வருண் ஆரோன், ஷிகர் தவன், என்று அனைவரும் வார்த்தைப் போர்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்திய அணிக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமிருக்கும் சிட்னி மைதானத்தில் உலகக்கோப்பை அரையிறுதி நடைபெறுகிறது.
ஜேம்ஸ் பாக்னர் இந்தப் போட்டியில் வீரர்களின் உணர்வு நிலை பற்றி கூறும் போது, “நிச்சயம் வார்த்தைப் போர் நிகழும். இந்த ஆட்டம் உண்மையில் கடினமான போட்டியாகவே இருக்கும்.
எப்போதும் ‘ஸ்லெட்ஜிங்’ இருக்கவே செய்யும். அது இல்லையென்றால்தான் பிரச்சினை இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஆட்டத்தின் இயல்பு அது. அரையிறுதிப் போட்டி என்றால் சும்மாவா? எந்த அணியும் பின் தங்கிவிடாது.” என்றார்.
வார்னர் டெஸ்ட் தொடரின் போது ரோஹித் சர்மாவை நோக்கி, ‘ஆங்கிலத்தில் பேசு’ என்றார். இப்போது 'அவர் ஒன்றும் பேசமாட்டார். இப்போதெல்லாம் வார்னர் அதிகம் பேசுவதில்லை.” என்றார்.
ஸ்பின் ஒரு தீர்மானிக்கும் காரணியாக இருக்காது: பாக்னர்
ஜேம்ஸ் பாக்னர் மேலும் கூறுகையில், “அஸ்வின், ஜடேஜா உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள். நீண்ட காலமாக இவர்கள் இந்திய அணிக்கு ஆடி வருகின்றனர். தென் ஆப்பிரிக்கா-இலங்கை போட்டியைப் பார்த்த போது அவ்வளவாக பந்துகள் ஸ்பின் ஆகவில்லை என்று தெரிந்தது. (இவர் போட்டியை பார்க்கவில்லை என்று தெரிகிறது ஏனெனில் இம்ரான் தாஹிர், டுமினியிடம் இலங்கை சுருண்டது)
சிட்னியில் இந்திய அணிக்கு ரசிகர்களின் ஆதரவு பயங்கரமாக இருக்கும் என்பது பற்றி நாங்கள் நேற்று இரவு உணவின் போது பேசினோம். கடைசியாக முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடும் போது இந்திய ரசிகர்களின் ஆதரவு அந்த அணிக்கு நன்றாக இருந்ததை உணர்ந்தோம். இந்திய அணி மீது அதன் ரசிகர்கள் காட்டும் உணர்வு மிகவும் அபாரமானது. நிச்சயம் அரையிறுதியிலும் இந்திய ரசிகர்களின் ஆதிக்கம் இருக்கும்.
இரண்டு டாப் அணிகள் அரையிறுதியில் மோதுகின்றன. ஆட்டம் நிச்சயம் பரபரப்பாக இருக்கும். தீவிரம் அதிகம் இருக்கும்.” என்றார் பாக்னர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT