Last Updated : 11 Mar, 2015 07:55 PM

 

Published : 11 Mar 2015 07:55 PM
Last Updated : 11 Mar 2015 07:55 PM

உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து மீது நிறவெறிப் புகார் சுமத்திய மாஜித் ஹக் நீக்கம்

ஸ்காட்லாந்து அணி நிர்வாகத்தின் மீது நிறவெறிப் புகார் சுமத்திய ஆஃப் ஸ்பின்னர் மாஜித் ஹக் அந்த அணியிலிருந்து நீக்கப்பட்டு நாட்டுக்கு அனுப்பப்பட்டார்.

இலங்கைக்கு எதிரான போட்டியில் இன்று ஸ்காட்லாந்து அணி வீரர் மாஜித் இடம்பெறவில்லை. இவருக்குப் பதிலாக மைக்கேல் லீஸ்க் தேர்வு செய்யப்பட்டார். மைக்கேல் லீஸ்க் இன்று 7 ஓவர்களில் 63 ரன்களை விட்டுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆத்திரமடைந்த மாஜித் ஹக் தனது ட்விட்டர் பதிவில், “சிறுபான்மையினராக இருந்தால் கடினம்தான், நிறம், இனம்..” என்று நிறவெறிப் புகார் தொனிக்க கூறியிருந்தார். பின்னர் இந்த ட்வீட் அகற்றப்பட்டது.

இதனையடுத்து அணியின் நடத்தை விதிகளை மீறியதாக ஸ்காட்லாந்து அணி நிர்வாகம் அவரை மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பியது.

இது குறித்த விசாரணை முடியும் வரை அடுத்த அறிவிப்பு எதுவும் இல்லை என்று ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

32 வயதாகும் மாஜித் ஹக்கின் முழு நீளப்பெயர் ரானா மாஜித் ஹக் கான். இவர் ஒருநாள் போட்டிகளில் 60 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் ஒருமுறை ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

அவரது அந்த ட்வீட் அகற்றப்பட்டாலும் வேறு வாசகம் இன்னும் இடம்பெற்றுள்ளது: "நீங்கள் செல்லும் படகில் நீங்கள் கவனியாத தருணத்தில் அனைவரும் துடுப்பு போடுகின்றனரா அல்லது படகில் ஓட்டைப் போடுகின்றனரா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்...உங்கள் வட்டத்தை நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.” என்ற வாசகம் இன்னமும் அவரது ட்விட்டர் பக்கத்தில் இருப்பதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x