Published : 31 Mar 2015 09:50 AM
Last Updated : 31 Mar 2015 09:50 AM

மியாமி ஓபன்: நடால் அதிர்ச்சி தோல்வி, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆன்டி முர்ரே

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி யின் 3-வது சுற்றில் உலகின் 3-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

மியாமி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நடால் 4-6, 6-2, 3-6 என்ற செட் கணக்கில் சகநாட்டவரும், சர்வதேச தரவரி சையில் 34-வது இடத்தில் இருப்பவ ருமான ஃபெர்னாண்டோ வெர்டாஸ்கோவிடம் தோல்வி கண்டார்.

நடாலுடன் இதுவரை 15 ஆட்டங்களில் மோதியுள்ள வெர்டாஸ்கோ முதல் 13 ஆட்டங் களில் தோற்றிருந்த நிலையில், கடைசி இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி குறித்துப் பேசிய வெர்டாஸ்கோ, “நடாலுக்கு எதிரான இந்த வெற்றி மிகப் பெரியது. பெரும் ரசிகர்கள் கூட்டத் துக்கு மத்தியில் நடைபெறும் பெரிய போட்டிகளில் டென்னிஸ் வரலாற்றின் தலைசிறந்த வீரர் ஒருவரை வீழ்த்துவது எப்போதுமே இனிமையானதாகும்” என்றார்.

14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரான நடால், இதுவரை 11 முறை மியாமி ஓபன் போட்டியில் பங்கேற்றிருந்தாலும், ஒருமுறைகூட சாம்பியன் பட்டம் வென்றதில்லை. தோல்வி குறித்துப் பேசிய நடால், “வெர்டாஸ்கோவுக்கு எதிராக விளையாடியபோது பலமுறை அதிலும் குறிப்பாக முக்கியமான தருணங்களில் பதற்றமடைந்தேன்.

எனது வாழ்க்கையில் நான் விளையாடிய 95 சதவீத போட்டிகளில் உணர்ச்சிவசப்படாமல் கட்டுக்குள் இருந்திருக்கிறேன். ஆனால் வெர்டாஸ்கோவுக்கு எதிராக அதுபோன்று கட்டுப்பாட்டோடு இருக்க முடியவில்லை” என்றார்.

மற்றொரு 3-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்த ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா 6-7 (4), 6-7 (5) என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 28-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸின் அட்ரியான் மனாரினோவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

அதேநேரத்தில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே 6-3, 6-4 என்ற நேர் செட்களில் கொலம்பியாவின் சான்டியாகோ கிரால்டோவை தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் முன்னேறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x