Published : 11 Mar 2015 04:42 PM
Last Updated : 11 Mar 2015 04:42 PM
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறி பலரது கிண்டலுக்கும், வசைக்கும் ஆளாகியுள்ள இங்கிலாந்து அணியை தங்கள் அணியும் வெல்லும் என்று கூறியுள்ளார் ஆப்கன் அணியின் பயிற்சியாளர்.
ஆப்கன் அணியின் பயிற்சியாளர் ஆன்டி மோல்ஸ் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணியை முதலில் ஆஸ்திரேலியா மவுன வதைக்குள்ளாக்க, நியூசிலாந்து அணி துவைத்து எடுக்க, இலங்கை அணி காயவைக்க, பிறகு வங்கதேச அணி மடித்து பேக் செய்து வீட்டுக்கு அனுப்பியது.
இந்நிலையில் ஆப்கன் பயிற்சியாளர் ஆன்டி மோல்ஸ் கூறியிருப்பதாவது:
"இந்த உலகக்கோப்பையில் விளையாடியதன் மூலம் நிறைய அனுபவங்களைப் பெற்றுள்ளோம். ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தினோம். ஆனால் உலகின் தலை சிறந்த அணிகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிக்கு எங்கள் அணி எந்த விதத்திலும் பொருத்தமுடையதல்ல.
ஆனால் இப்போது இங்கிலாந்துடன் மோதவிருக்கிறோம். இந்தத் தொடரில் அவர்கள் ஒருவர் கூட ஃபார்மில் இல்லை. வெள்ளிக்கிழமையன்று நடக்கும் இந்தப் போட்டியில் நன்றாக விளையாடி, எங்கள் பதட்டத்தை அமைதிப் படுத்தி இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளிப்போம்.
நாங்கள் உலகக்கோப்பையை வெல்ல இங்கு வரவில்லை என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும், ஆனால் எங்களால் என்ன முடியும் என்பதைக் காட்டியுள்ளோம். இலங்கையை அன்று அச்சுறுத்தினோம்.
அடிலெய்டில் அன்று வங்கதேச அணி செய்த சாதனையைப் பார்த்தோம், எனவே நாங்களும் அதிர்ச்சியளிக்கத் தயாராக இருக்கிறோம்." என்றார்.
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சிட்னியில் ஆப்கன் அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT