Published : 07 Mar 2015 06:10 PM
Last Updated : 07 Mar 2015 06:10 PM
உலகக்கோப்பை போட்டியில் இன்று அயர்லாந்து வெற்றி பெற்றதற்குக் காரணம் மூனி, சான் வில்லியம்சுக்கு பிடித்த சர்ச்சைக்குரிய கேட்ச்தான் என்ற பேச்சு எழுந்துள்ளது.
ஜிம்பாப்வேயின் சான் வில்லியம்ஸ் உலகக்கோப்பை போட்டிகளில் மிகவும் சீராக ஆடி வருகிறார். அயர்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் அவர் 83 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 96 ரன்களில் இருந்த போது சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார்.
வில்லியம்ஸ் 96 ரன்களில் இருந்த போது ஜிம்பாப்வே வெற்றிக்குத் தேவை 20 பந்துகளில் 32 ரன்கள். 6 விக்கெட்டுகள் கையில் உள்ளது. அப்போது அயர்லாந்து ஆல்ரவுண்டர் கெவின் ஓ பிரையன் ஒரு ஷாட் பிட்சை வீச அதனை சான் வில்லியம்ஸ் தூக்கி மிடிவிக்கெட் மீது அடித்தார். பந்து சிக்சருக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது எல்லைக்கோட்டுக்கு மிக அருகில் நின்று கொண்டிருந்த அயர்லாந்து பீல்டர் மூனி எம்பிப் பிடித்தார் கேட்சை, ஆனால் அவரது கால் எல்லைக்கோட்டை மிதித்தது போலவே தெரிந்தது. ஏனெனில் எல்லைக்கோடு அட்டையில் சிறு அசைவு தெரிந்தது. அது சிக்ஸ் என்று ஜிம்பாப்வே பயிற்சியாளர் டேவ் வாட்மோர் உள்ளிட்டோர் பெவிலியனிலிருந்து கதறினர்.
ரீப்ளே திரும்ப திரும்பப் பார்க்கப்பட்டது. அது அவுட்தானா என்று ஆராயப்பட்டது. ஆனால் எந்த ஒரு நிச்சயத்தன்மையும் இல்லாத நிலையில் வில்லியம்ஸ் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. சான் வில்லியம்ஸ் மிகுந்த ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.
கண்டிப்பாக ஜிம்பாப்வே பயிற்சியாளர் டேவ் வாட்மோர் கடும் ஏமாற்றமடைந்திருப்பார், ஏனெனில் அவர் அங்கிருந்து சிக்ஸ் என்று கையை தூக்கினார். ஆனால், இந்த விவகாரத்தில் பீல்டரின் வார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
ஜிம்பாப்வே 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. அந்த சிக்ஸ் கொடுக்கப்பட்டிருந்தால் வில்லியம்ஸ் சதம் அடித்திருப்பார், ஜிம்பாப்வே ஒரு வெற்றியைச் சாதித்திருந்தாலும் சாதித்திருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT