Published : 20 Mar 2015 09:34 AM
Last Updated : 20 Mar 2015 09:34 AM
அடிலெய்டு நகரில் இன்று நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3-வது காலிறுதியில் அசைக்க முடியாத அணியாகத் திகழும் ஆஸ்திரேலியாவும், கணிக்க முடியாத அணியான பாகிஸ்தானும் மோதுகின்றன.
ஆஸ்திரேலியா அணி லீக் சுற்றில் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டம் தவிர, எஞ்சிய ஆட்டங்களில் சிறப்பாகவே ஆடி வந்துள்ளது. அதேநேரத்தில் பாகிஸ்தானோ ஆரம்பத்தில் தடுமாறிய நிலையில், பின்னர் அதிலிருந்து மீண்டு தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
கடைசியாக 2005-ல் பெர்த்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த பாகிஸ்தான், அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியதில்லை. இதுதவிர அந்நிய மண்ணில் ஆடிய கடைசி 7 ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றுள்ளது. இதுபோன்ற விஷயங்கள் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமானதாக பார்க்கப்படுகிறது.
ஆனால் கணிக்க முடியாத அணியான பாகிஸ்தானை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியும். கடந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கை நாயகன் மிஸ்பா
பாகிஸ்தான் பேட்டிங்கில் தொடக்க வீரர் சர்ஃப்ராஸ் அஹமது, கேப்டன் மிஸ்பா உல் ஹக், அஹமது ஷெஸாத், உமர் அக்மல், அப்ரிதி ஆகியோர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இவர்களில் சர்ஃப்ராஸ், கடந்த ஆட்டத்தில் அயர்லாந்துக்கு எதிராக சதமடித்துள்ளார். கேப்டன் மிஸ்பா 4 அரை சதங்களை விளாசியுள்ளார்.
பந்துவீச்சை பொறுத்தவரையில் முகமது இர்ஃபான் காயம் காரணமாக விலகியதால் அவருக்குப் பதிலாக இஷான் அடில் சேர்க்கப்படலாம். வேகப்பந்து வீச்சாளர்கள் வஹாப் ரியாஸ், சோஹைல் கான் ஆகியோர் பாகிஸ்தானின் முக்கிய துருப்பு சீட்டாக திகழ்கின்றனர்.
மிரட்டும் ஸ்டார்க்
ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், ஸ்டீவன் ஸ்மித், வாட்சன், மேக்ஸ்வெல் என பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆனால் இவர்களில் யாரும் தொடர்ச்சியாக ரன் குவிக்காதது கவலையளிக்கிறது. வார்னர், மேக்ஸ்வெல் ஆகியோரில் ஒருவர் சதமடித்தால்கூட அந்த அணி வலுவான ஸ்கோரை எட்டிவிடும்.
வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு கடும் அச்சுறுத்தலாக இருப்பார். இதுவரை 5 ஆட்டங்களில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இதேபோல் ஜான்சன், கம்மின்ஸ், ஹேஸில்வுட் ஆகியோரும் பலம் சேர்க்கின்றனர். எனினும் கம்மின்ஸ், ஹேஸில்வுட் ஆகியோரில் ஒருவருக்கே ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT