Published : 31 Mar 2015 08:57 PM
Last Updated : 31 Mar 2015 08:57 PM
விராட் கோலியின் உலகக் கோப்பை ஆட்டத்துக்கு அனுஷ்கா சர்மாவை குறை கூறுவதை ‘முட்டாள்தனமானது’ என்று வர்ணித்த ரவி சாஸ்திரி, கோலியை இப்படியெல்லாம் விமர்சிக்க முடியாது என்’று கூறியுள்ளார்.
பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சாஸ்திரி அளித்த பேட்டி வருமாறு:
"இல்லையெனில் அவர் 700 ரன்களையும் டெஸ்ட் போட்டிகளில் 4 சதங்களையும் எடுத்திருக்க முடியுமா. பணியின் மீதான அவரது கட்டுக்கோப்பும் கவனமும் அபரிமிதமானது. அவரது இருதயம் இந்தியாவுக்காக துடிக்கிறது. இதனை நாம் காண்பது அரிது. உண்மையைக் கூற வேண்டுமெனில் அவர் இன்னமும் முடிந்து விடவில்லை.
அவரிடம் உள்ள போராடும் குணம் முக்கியமானது” என்று கூறிய சாஸ்திரி,
தோனியின் பேட்டிங் பற்றி குறிப்பிட்டபோது, “டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு பெற்ற பிறகு இன்னும் சிறப்பாக பேட் செய்யவே வாய்ப்புள்ளது. அவரது உடல்தகுதியும் நல்ல நிலையில் உள்ளதால், அவர் தனது பேட்டிங் மீது இன்னும் கூடுதல் கவனம் செலுத்தவிருக்கிறார். உலகில் உள்ள பவுலர்களை தனது அதிரடியால் வதைக்க அவருக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது” என்றார்.
ஆஸ்திரேலிய அணி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் பற்றி...
இந்த உலகக் கோப்பையின் சிறந்த அணி ஆஸ்திரேலியாதான் என்பதில் சந்தேகமில்லை. ஸ்டீவ் ஸ்மித்தின் பலவீனமென்ன என்று நிறைய அணிகள் என்னிடம் கேட்டன. இந்திய அணி 4 மாதங்களாக ஆஸ்திரேலியாவில் இருந்ததால் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் என்றனர். ஆனால் நான் அவர்களிடத்தில் இப்படி கூறினேன், “நீங்கள் ஸ்மித்திடம் ஏதாவது பலவீனம் கண்டுபிடித்தால் எனக்கு அதனை தெரிவியுங்கள்’ என்றேன்.
அவர் கண் மற்றும் கை ஒருங்கிணைப்பு அபாரமானது. நல்ல கிரிக்கெட் மூளை, எப்போதும் களவியூகத்தில் இடைவெளிகளைக் கண்டுபிடித்து விடுகிறார்.
இந்தத் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாடு மற்ற அணிகளுக்குச் சமமாக நன்றாக இருந்தது. ஆம்லாவோ, யூனிஸ் கானோ ஷார்ட் பிட்ச் பந்துக்கு குனிந்து மட்டையைக் கொண்டு தடுத்தாடி வட்டத்துக்குள் கேட்ச் கொடுத்ததை நாம் பார்க்க முடியுமா? எனவே வேகப்பந்து வீச்சாளர்களுக்குரிய மன நிலையில் அவர்கள் வீசினர்.
ஆஸ்திரேலிய தொடர் இந்திய அணிக்கு எத்தகைய தன்னம்பிக்கையை அளித்துள்ளது என்பதை மக்கள் உணரவில்லை. உலகக் கோப்பை தொடரில் தோல்வியடைந்தால் அது இந்திய அணிக்கு எதிராகவே இருக்கும் என்று ஆஸ்திரேலிய அணி கருதியது எனக்கு தெரியும்” இவ்வாறு கூறினார் ரவி சாஸ்திரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT