Published : 04 Mar 2015 05:32 PM
Last Updated : 04 Mar 2015 05:32 PM
டிவில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், மெக்கல்லம் போன்ற அதிரடி வீரர்கள் அடித்து நொறுக்கத் தொடங்கிவிட்டால் கேப்டனோ, பவுலரோ ஒன்றும் செய்வதற்கில்லை என்று இந்திய கேப்டன் தோனி கூறியுள்ளார்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டிவில்லியர்சை நெருக்கி 2-வது ரன் ஓட வைத்து ரன் அவுட் செய்தது இந்தியா, ஆனால் அடுத்த மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்கு இன்னொரு பெரிய தலைவலி கிறிஸ் கெய்ல், இவருக்கு ஆட்டம் பிடித்தால் எந்த ஒரு இலக்கும் மண்தான்.
டிவில்லியர்ஸ், மெக்கல்லம் கிறிஸ் கெய்ல், முந்தைய உலகக்கோப்பையில் நம் சேவாக், யூசுப் பத்தான், பாகிஸ்தானின் அஃப்ரீடி, ஆஸி.யின் கிளென் மேக்ஸ்வெல், ஜேம்ஸ் ஃபாக்னர் உள்ளிட்ட வீரர்களிடம் ஒரு எக்ஸ்-ஃபேக்டர் உள்ளது. அன்றைக்கு சிக்கினால் எதிரணியினருக்கு திண்டாட்டம்தான்.
இந்நிலையில் கெய்லுக்கு எதிராக எதுவும் முன் திட்டம் உள்ளதா என்று தோனியிடம் கேட்ட போது, சிறந்த திட்டம் என்னவெனில் எதுவும் திட்டமிடாமல் இருப்பதே என்றார்:
“திறந்த மனதுடன் கூறினால்...இவர்கள் ஆடத் தொடங்கி சிக்சர்கள் அடிக்கத் தொடங்கினால் ஒன்றும் செய்ய முடியாது என்பதே. சிக்சருக்கு வியூகம் அமைக்க இயலாது.
ஏதாவது முன் திட்டமிட்டால் அதில் நாம் தோற்றுத்தான் போவோம். உதாரணமாக ஷாட் பிட்ச் வீசலாம் என்று தீர்மானித்தால் அத்தனை ஷாட்பிட்சும் பவுண்டரி போக ஆரம்பித்தால் அவ்வளவுதான்.
இப்படிப்பட்ட பேட்ஸ்மென்களை ஏமாற்றிப் பார்க்கலாம். இதன் மூலம் பவுலர்கள் வித்தியாசமாக ஏதாவது முயற்சிகளை மேற்கொள்ளலாம். அதைத் தவிர இதைச் செய்தால் இது நடக்கும் என்றவாறான நிலையான திட்டம் அவர்களுக்கு எதிராக செய்ய முடியாது.
இங்குதான் பந்துவீச்சாளர்கள் ஒரு கூடுதல் முயற்சி மேற்கொள்வது அவசியம். பீல்டர்களும் அவருக்கு உதவி புரியவேண்டும். ஒரு அரை வாய்ப்பு கிடைத்தால் கூட அவர்களை வீழ்த்த முனைப்பு காட்ட வேண்டும். அதாவது ஒரு வேட்டைக்குழு போல ஒன்றாக செயலாற்ற வேண்டும். அப்போதுதான் அவர்களை வீழ்த்த முடியும்.” என்கிறார் தோனி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT