Published : 08 Mar 2015 05:20 PM
Last Updated : 08 Mar 2015 05:20 PM

சங்ககாரா சாதனை சதம் வீண்: ஆஸி.யிடம் வீழ்ந்தது இலங்கை

| சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14,000 ரன்களை எட்டிய இரண்டாவது வீரர் என்ற உலக சாதனையை சிட்னியில் வசப்படுத்தினார் இலங்கை வீரர் சங்ககாரா. |

உலகக் கோப்பை ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், இலங்கையை 64 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது.

இப்போட்டியில் 377 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 312 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.

இதனால், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் சதமடித்து புதிய சாதனை படைத்த சங்ககாராவின் முயற்சி வீண் ஆனது. இப்போட்டியில் அவர் 107 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார்.

தில்ஷன் 62 ரன்களையும், சண்டிமால் 52 ரன்களையும் சேர்த்தனர். மேத்யூஸ் 35 ரன்களையும், ஜெயவரத்தனே 19 ரன்களையும் எடுத்தனர். ஏனையோர் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலிய தரப்பில் ஃபவுல்க்னர் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், ஜான்சன் தலா 2 விக்கெட்டுகளையும், வாட்சன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இப்போட்டியில், ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்ட மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சங்ககாரா புதிய உலக சாதனை

சங்ககாரா | படம்: ஏபி

இப்போட்டியில் சங்ககாரா 39 ரன்களை எடுத்தபோது, ஒருநாள் போட்டிகளில் 14,000 ரன்களை எட்டினார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை எட்டிய இரண்டாவது வீரர் என்ற புதிய உலக சாதனையை அவர் வசப்படுத்தினார்.

தற்போது, 402 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14,065 ரன்கள் குவித்து, ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் பட்டியலில் சங்ககாரா இரண்டாம் இடத்தில் உள்ளார்.

463 போட்டிகளில் 18,246 ரன்கள் குவித்த ஓய்வு பெற்ற இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

இந்தப் பட்டியலில் 375 போட்டிகளில் 13,704 ரன்களுடன் ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பான்டிங் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலிய இன்னிங்ஸ்

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா தனது இன்னிங்ஸில் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 376 ரன்கள் குவித்தது. இதன்மூலம், 377 ரன்கள் என்ற மிகப் பெரிய இலக்கை இலங்கைக்கு ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிப்புக்கு மேக்ஸ்வெல் விளாசிய அபார சதம் உறுதுணை புரிந்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ஃபின்ச் 24 ரன்களிலும், வார்னர் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர், பொறுப்புடன் பேட் செய்த ஸ்மித் - கிளார்க் கூட்டணி அணிக்கு வலுவான ஸ்கோருக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. ஸ்மித் 72 ரன்களும், கிளார்க் 68 ரன்களும் சேர்த்தனர்.

மேக்ஸ்வெல் மிகச் சிறப்பாக பேட் செய்து அபார சதம் அடித்தார். அவர் 53 பந்துகளில் 102 ரன்கள் விளாசினார். அவருக்கு பக்க பலமாக இருந்த வாட்சன் 41 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்தார். ஹிதீன் 25 ரன்கள் எடுத்தார்.

இலங்கை தரப்பில் மலிங்கா, பரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மேத்யூஸ், பிரசன்னா மற்றும் தில்ஷன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x