Published : 29 Mar 2015 05:56 PM
Last Updated : 29 Mar 2015 05:56 PM

கோப்பையை ஹியூஸுக்கு அர்ப்பணித்து நெகிழவைத்த கிளார்க்

உலகக் கோப்பையை 'குட்டி சகோதரன்' பிலிப் ஹியூஸுக்கு அர்ப்பணிப்பதாக, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் அறிவித்தார்.

அந்தத் தருணத்தில் தொடங்கி, மறைந்த பிலிப் ஹியூஸ் ட்விட்டர் ட்ரெண்ட்டிங்கில் வலம் வரத் தொடங்கினார். ஆஸ்திரேலிய கேப்டனை ஆராதித்து பதிவுகள் கொட்டத் துவங்கின.

மைக்கேல் கிளார்க்கின் வெற்றிக் குறிப்புரை நெகிழவைப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

தெற்கு ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வந்த இளம் வீரர் பிலிப் ஹியூஸ், கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில், ஷெப்பீல்டு ஷீல்டு கோப்பைக்கான முதல்தர கிரிக்கெட் போட்டியில் பவுன்சர் பந்து தாக்கியதில் மரணமடைந்தார். கிரிக்கெட் உலகை உலுக்கிய அந்த மரணம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் பெரும் துயரமானது நினைகூரத்தக்கது.

கிளார்க் நெகிழ்ச்சி

மெல்போர்னில் நடந்த இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி 5-வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.

பரிசளிப்பு விழாவில் பேசிய கிளார்க், ‘குட்டி சகோதரர்’ பிலிப் ஹியூஸுக்கு வெற்றிக் கோப்பையை அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன். என்ன மாதிரியான உலகக் கோப்பை தொடர் இது! பிரெண்டன் மெக்கல்லம் மற்றும் நியூசிலாந்து அணிக்கு பாராட்டுகள். நியூசிலாந்து அணி எப்போதும் தோற்கடிக்க கடினமான அணி. எப்போது விளையாடினாலும் நியூசி.யை வீழ்த்துவது எளிதல்ல. மெக்கல்லம் தனிப்பட்ட முறையில் அபாரமாக தன் அணியை வழிநடத்தினார்.

எங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. அணிக்குள் நான் மீண்டும் வந்த பிறகு பயிற்சியாளர்களும் அணி வீர்ர்களும் எனக்கு அளித்த ஆதரவு அசாதாரணமானது. இங்கு என்னுடன் அவர்களும் நிற்க வேண்டும்.

ஒவ்வொரு முறை ஆஸ்திரேலியாவுக்கு விளையாடும் போதும் பிலிப் ஹியூஸ் என்ற பெயர் பொறிக்கப்பட்ட பட்டையை நான் அணிவேன். சில மாதங்கள் கடினமாக இருந்தது. நாங்கள் 16 வீரர்களுடன் விளையாடியதாக பலரும் கூறினர்.

இந்த வெற்றியை ‘குட்டி சகோதரன்’ பிலிப் ஹியூஸுக்கு அர்ப்பணிக்கிறேன். எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இது ஓர் அசாதாரணமான சாதனையாகும். அதாவது எங்கள் மண்ணில் எங்கள் நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் உலகக் கோப்பையை வெல்வது பெரிய மகிழ்ச்சியளிக்கிறது” என்றார் கிளார்க்.

இன்றோடு ஓய்வு பெற்றார் கிளார்க்

ஆஸ்திரேலிய அணியின் மிகுந்த உத்வேகமுடைய கேப்டனான மைக்கேல் கிளார்க் இன்று நடந்து முடிந்த இறுதி ஆட்டத்தோடு ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இன்னும் சில தினங்களில் 34-வது வயதை எட்டவுள்ள கிளார்க், இறுதிப் போட்டி தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தனது ஓய்வு முடிவை அறிவித்திருந்தார்.

அப்போது, "நாளைய ஆட்டமே (இன்று நடைபெற்ற இறுதிப்போட்டி) எனது கடைசி ஒருநாள் போட்டி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனது சகவீரர்கள், பயிற்சியாளர் லீமான் உள்ளிட்ட அனைவரிடமும் இது தொடர்பாக சற்று முன்னர்தான் தெரிவித்தேன்.

நியூஸிலாந்துடனான இறுதி ஆட்டம் எனது 245-வது ஒருநாள் ஆட்டமாகும். எங்கள் நாட்டு அணிக்காக இவ்வளவு ஆட்டங்களில் விளையாடியதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகவும், பெரும் பேறாகவும் கருதுகிறேன். என்னுடன் விளையாடிய ஒவ்வொரு வீரருக்கும், தற்போதைய அணிக்கும் நான் மிகுந்த நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

நான் ஓய்வுபெறுவது எனக்கும், ஆஸ்திரேலிய அணிக்கும் சரியான நேரம் என நினைக்கிறேன். அடுத்த கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித் தேர்வு செய்யப்படலாம் என கருதுகிறேன். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன்" என்றார்.

இதுவரை 245 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள கிளார்க் 8 சதங்களுடன் 7,981 ரன்கள் குவித்துள்ளார். கிளார்க் தலைமையில் 74 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா, 50-ல் வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை இறுதிப் போட்டி அலசலை வாசிக்க - >தகர்ந்த நியூஸி.யின் கனவும் 5 முறை சாம்பியனான ஆஸி.யும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x