Published : 20 Mar 2015 07:10 PM
Last Updated : 20 Mar 2015 07:10 PM
உலகக்கோப்பை காலிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்த போட்டி மிஸ்பா, ஷாகித் அப்ரீடி ஆகியோருக்கு கடைசி ஒருநாள் போட்டியாகும்.
162 ஒருநாள் போட்டிகளில் 5,122 ரன்களை எடுத்துள்ள மிஸ்பா அதில் ஒரு சதம் கூட எடுத்ததில்லை. சதம் இல்லாமல் ஒரு வீரர் 5000 ரன்களுக்கும் மேல் எடுத்திருப்பது என்ற சாதனையில் மிஸ்பா இருக்கிறார் என்று தெரிகிறது. டெஸ்ட் போட்டிகளில் மிஸ்பா தொடர்ந்து விளையாடுவார் என்று தெரிகிறது.
இதனையடுத்து ஓய்வு பெறும் மிஸ்பா உல் ஹக் கூறும் போது, “ஒருநாள் போட்டியில் சதம் எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை, ஆனால் அது நிகழவேயில்லை.
நான் இதற்காக நிறைய முயற்சிகள் மேற்கொண்டேன், ஆனால் அது வரவேயில்லை. இது ஒரு மிகப்பெரிய ஏமாற்றமே. ஆனாலும் எனது கிரிக்கெட் வாழ்நாளை மகிழ்ச்சியுடன் விளையாடினேன். எனக்கு முழு திருப்தி இருக்கிறது.
எனது நாட்டை பிரதிநிதித்துவம் செய்தது எனக்குக் கிடைத்த மரியாதை. மகிழ்ச்சியுடன் ஆடினேன், நாட்டிற்காக அர்ப்பணித்தேன்.
என்னுடைய திட்டங்கள் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளேன்.
இளைஞர்கள் கையில் பொறுப்பை அளிக்காமல் அவர்கள் முன்னேற்றம் அடைய மாட்டார்கள். இப்போது அதற்கு நேரம் வந்துள்ளது. அவர்கள் இனி பொறுப்பேற்க வேண்டும். ’
நான் எனது இன்னிங்ஸை ஆடிவிட்டேன். இனி இளைஞர்கள் கையில் பொறுப்பை ஒப்படைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இளம் வீரர்கள் முழுமையான சர்வதேச வீரர்களாக வேண்டுமெனில் கடினமாக உழைக்க வேண்டும், இதைத்தான் நான் எனது மூத்த வீரர்களான இன்சமாம், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், மொகமது யூசுப் ஆகியோரிடம் கற்றுக் கொண்டேன்.
அவர்களிடமிருந்த போராட்ட குணம்தான் என்னை அவர்களை பின்பற்றச் செய்தது. இளம் வீரர்களும் இந்தப் பாதையில் செல்ல வேண்டும்.
வெற்றிகள் அனைத்துமே சிறப்பானதுதான், ஆனாலும், இந்திய அணியை இந்தியாவில் வீழ்த்தியது மிகப்பெரியது. பிறகு தென் ஆப்பிரிக்காவில் வென்றது. தென் ஆப்பிரிக்காவில் தொடரை வென்ற முதல் பாகிஸ்தான் அணி என்ற பெருமை ஆகியவை என்னால் மறக்க முடியாததாகும்.” என்றார் மிஸ்பா உல் ஹக்.
மே.இ.தீவுகளுக்கு எதிராக 2013 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் எடுத்த 96 ரன்களே மிஸ்பாவின் அதிகபட்ச ஒருநாள் போட்டி ஸ்கோராகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT