Last Updated : 27 Mar, 2015 04:29 PM

 

Published : 27 Mar 2015 04:29 PM
Last Updated : 27 Mar 2015 04:29 PM

கோலி சொதப்பல்: அனுஷ்காவுக்கு பாலிவுட் ஆதரவுக் குரல்

"அனுஷ்கா சர்மா செய்த தவறென்ன? மற்ற வீரர்களின் குடும்பத்தினர்கள் கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்க நேரில் சென்றது போல் இவரும் சென்றார்" என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

இதேபோல், பாலிவுட் பிரபலங்கள் பலரும் அனுஷ்கா சர்மாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா அடைந்த தோல்விக்கு விராட் கோலியின் பேட்டிங் தோல்வியே காரணம் என்றும், அதற்கு அனுஷ்கா சர்மாவே காரணம் என்று சமூக வலைதளங்களில் அவர் மீது கடும் சாடல்கள், கிண்டல்கள் எழுந்தன.

அனுஷ்கா ஷர்மாவைக் குறிவைக்கும் நபர்களின் மனநிலை வருத்தத்தை அளிக்கிறது என்று கங்குலி தெரிவித்தார்: “அனுஷ்கா ஷர்மா செய்த தவறென்ன? மற்ற வீரர்களின் குடும்பத்தினர் போட்டியைக் காண மைதானத்துக்குச் சென்றது போல் அவரும் சென்றார். கோலியின் ஆட்டத்திற்காக அனுஷ்கா சர்மாவை குற்றம்சாட்டுவது நியாயமாகாது. ரசிகர்களின் முதிர்ச்சியின்மையையே இது காட்டுகிறது.

இரண்டு பேரும் காதல் வயப்பட்டிருந்தால் அதில் என்ன தவறு?” என்றார்.

பாலிவுட் உலகம் என்ன கூறுகிறது?

பிரியங்கா சோப்ரா: ஆதரவான ஒரு தோழி போட்டியை நேரில் சென்று பார்த்ததற்காக அநியாயமாகச் சாடப்படுகிறார். இது பயங்கரமாக உள்ளது. இதனை உடனடியாக நிறுத்துங்கள்.

சுஷ்மிதா சென்: தனக்கு பிரியமானவரையும் நாட்டை ஆதரிக்கவும் அனுஷ்கா ஷர்மா சென்றது குறித்து மகிழ்ச்சி. அவரை கேலி செய்பவர்கள் வேறு விளையாட்டைத் தேர்ந்தெடுக்கவும்.

ரிஷி கபூர்: அனுஷ்கா உங்களுக்கு என் ஆதரவு. கல்வியறிவற்ற சில முட்டாள்கள் உங்களை குறிவைக்கின்றனர்.

அர்ஜுன் கபூர்: நேற்று ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடியதை பாராட்டுவோம். இதனை விடுத்து தனி நபர்களை தோல்விக்காக சாடுவது கூடாது.

டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா: அனுஷ்கா மீது கேலியும், குற்றச்சாட்டுகளுமா? பெண் என்பவர் எப்போதும் கவனத்தை சிதறடிப்பவர்தானோ? பலம் சேர்ப்பவர் அல்லவோ? விராட் 100 அடித்து வெற்றி பெற்ற பிற தருணங்கள் பற்றி என்ன கூறுகிறீர்கள்?

இவ்வாறு அனுஷ்கா ஷர்மாவுக்கு ஆதரவுக் குரல்கள் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x