Published : 05 Mar 2015 06:40 PM
Last Updated : 05 Mar 2015 06:40 PM
பத்திரிகையாளரை திட்டி சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ள விராட் கோலிக்கு, முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் வி.வி.எஸ்.லஷ்மண் ஆகியோர், பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்குமாறு அறிவுரைத்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு, பத்திரிகையாளர் ஒருவரை விராட் கோலி சரமாரியாகத் திட்டி சர்ச்சையில் சிக்கினார். ஆனால் திட்டிய பிறகே அவர், தான் நினைத்த பத்திரிகையாளர் அல்ல, வேறொருவர் என்பது கோலிக்குத் தெரிந்தது. இதைத் தொடர்ந்து அந்த பத்திரிகையாளர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் கோலி மீது புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் பற்றி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியதாவது;
"நான் கண்ணாடியில் என்னைப் பார்த்துக் கொண்டு, என்னுள் இருக்கும் அத்தனை அழுத்தங்களையும் வெளியேற்ற முயற்சிப்பேன். எவ்வளவு அழுத்தமான சூழ்நிலையிலும் அமைதியாக இருக்க முயற்சிப்பேன். தோனியைப் போலவோ, லக்ஷ்மணை போலவோ, டென்னிஸ் வீரர் ஜார்ன் போர்க்கை போலவோ எந்த சூழலிலும் அமைதியாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.
ஊடகங்கள் இங்கு முக்கியமான பங்கை வகிக்கின்றன. வீரர்கள், நிர்வாகம், ஊடகம், ரசிகர்கள், விளம்பரதாரர்கள் என கிரிக்கெட்டோடு சம்பந்தப்பட்ட அனைவருமே, விளையாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
அதே நேரத்தில், ஊடகங்களும் உண்மையான தகவல்களையே தர வேண்டும். தாங்கள் கேள்விப்படாத விஷயங்களையோ, ஊகத்தின் அடிப்படையிலோ செய்தி இருக்கக் கூடாது"
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
லஷ்மண் பேசுகையில், "இந்தப் பிரச்சினையை சுமுகமாக முடிக்க ஒரே வழி, சம்பந்தப்பட்ட பத்திரிகையாளரை கோலி நேரில் சந்தித்து, 'உங்களை வேறொருவர் என தவறாக நினைத்து விட்டேன்' எனக் கூறி மன்னிப்பு கேட்பதுதான். ஒரே ஒரு முறை, வீரர்களின் அறையில் எனது பொறுமையை இழந்து கோபம் கொண்டுள்ளேன். மற்றபடி எங்குமே நான் எனது பொறுமையை இழந்ததில்லை" என்றார்.
முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சாதனை வீரர் பிரயன் லாரா பேசுகையில், "ஊடகங்கள் வீரர்கள் இடையிலான உறவைப் பேணுவது என்றுமே எளிதாக இருந்ததில்லை. எனக்கும் ஊடகங்களுடன் சச்சரவு ஏற்பட்டுள்ளது. இது போன்ற விஷயங்கள் நடக்கும் ஆனால் சம்பந்தப்பட்ட இருவருமே விளையாட்டின் நலனை, உலகக் கோப்பையை கருத்தில்கொண்டு, அதை மறக்க வேண்டும். அணியின் பார்வையிலிருந்து பார்க்கும் போது, கண்டிப்பாக இது இந்திய அணியின் கவனத்தை சிதறடிக்கும். இந்தச் சம்பவத்தால் கோலி பாதிக்கப்பட்டிருக்கலாம், அல்லது இன்னும் வைராக்கியம் பெற்றிருக்கலாம்" என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT