Published : 09 Mar 2015 09:36 AM
Last Updated : 09 Mar 2015 09:36 AM

ஆப்கனைச் சுருட்டினார் வெட்டோரி: 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் ஏ-பிரிவு லீக் ஆட்டத்தில், ஆப்கானிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூஸிலாந்து.

நேப்பியரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்தது. டிம் சவுத்தியும், போல்ட்டும் பந்துவீச்சைத் தொடங்கினர். போல்ட் தனது மூன்றாவது பந்தில் ஜாவேத் அஹமதியை (1) எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.

வெட்டோரி முதல் பந்திலேயே உஸ்மான் கானியை (0) கிளீன் போல்டு செய்தார். நியூஸிலாந்தின் பந்து வீச்சை எதிர்கொள்ள ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் திணறினர். அஸ்கர் ஸ்டானிக்ஸாயை (9) போல்ட் வெளியேற்றினார். மங்கள் 27 ரன்களில் வெளியேறினார். மங்களின் விக்கெட், ஒரு தினப் போட்டிகளில் வெட்டோரியின் 300-வது விக்கெட்டாகும்.

தொடர்ந்து முகமது நபி (6), அப்சர் ஸாய் (0) ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றினார் வெட்டோரி.ஜாட்ரான் 56 பந்துகளில் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய சென்வாரி 110 பந்துகளில் 54 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆப்கானிஸ்தான் 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்கள் எடுத்தது.

அதிரடி தொடக்கம்

மெக்கல்லம் அதிரடியால் நியூஸிலாந்து 5.4 ஓவர்களில் 50 ரன்களைக் கடந்தது. மெக்கல்லம் 19 பந்துகளில் 42 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.வில்லியம்சன் 33, கப்டில் 57, எலியட் 19 ரன்களில் ஆட்டமிழந்தனர். நியூஸிலாந்து அணி 36.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

டெய்லர் 24, ஆண்டர்சன் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 18 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வெட்டோரி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x