Published : 14 Mar 2015 04:40 PM
Last Updated : 14 Mar 2015 04:40 PM

ஸ்காட்லாந்தை ஊதிய ஆஸ்திரேலியா காலிறுதியில் தென்னாப்பிரிக்கா மோதலை தவிர்த்தது

ஹோபார்ட்டில் நடைபெற்ற உலகக்கோப்பை ஏ-பிரிவு ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதன் மூலம் 6 போட்டிகளில், 4 வெற்றி, ஒரு தோல்வி ஒரு நோ-ரிசல்ட்டுடன் 9 புள்ளிகள் பெற்று 2ஆம் இடத்துக்கு முன்னேறி காலிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மோதலை தவிர்த்துள்ளது.

ஸ்காட்லாந்து 130 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 15.2 ஓவர்களில் 133/3 என்று வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற மைக்கேல் கிளார்க் முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தார். மிட்செல் ஸ்டார்க், ஜான்சன், கமின்ஸ் வேகப்பந்து கூட்டணியில் ஸ்காட்லாந்து என்னதான் செய்ய முடியும். 25.4 ஓவர்களில் 130 ரன்களுக்கு மடிந்தது. ஸ்டார்க் 14 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்த உலகக்கோப்பையில் இதுவரை அதிக விக்கெட்டுகள் வரிசையில் முன்னிலை வகிக்கிறார்.

ஸ்காட்லாந்து அணியில் 5 வீரர்கள் 0-வில் ஆட்டமிழந்தனர். அன்று சதம் கண்ட குயெட்சருக்கு இன்று பேட்டிங் ஒரு துர்சொப்பனமாக அமைந்திருக்கும். ஸ்டார்க் வீசிய முதல் ஓவர் குயெட்சருக்கு நாம் எங்கோ வந்து மாட்டிக் கொண்டு விட்டோம் என்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கும். முதல் பந்து பவுன்சர். அடுத்த பந்து அதிவேகமாக மட்டையைக் கடந்து சென்றது. 4-வது பந்து பாதம் பெயர்க்கும் ஒரு லெக் ஸ்டம்ப் யார்க்கர். கால்களுக்கு இடையில் ஏதோ பாம்பு புகுந்தது போல் இரண்டு கால்களையும் எழுப்பி மட்டையை ஒருவாறாக தரையில் இறக்கி தடுத்தார் அல்லது பந்து மட்டையில் பட்டது. அடுத்த பந்து அதிவேகத்தில் எட்ஜைக் கடந்து சென்றது. இதுதான் அந்த முதல் ஓவர்.

இந்த ஆக்ரோஷம் தொடங்கிய பிறகு, ஸ்காட்லாந்து 51/5 என்று ஆனது. குயெட்சர் அந்த முதல் ஓவருக்குப் பிறகே பேட்டிங்கை மறந்து போனார். ஸ்டார்க் பந்தை எட்ஜ் செய்தார். கேப்டன் மோம்சன், ஷேன் வாட்சன் வீசிய மூக்கிற்கு வந்த பவுன்சரை ஹூக் ஆட முயன்று கேட்ச் கொடுத்தார். ஃப்ரெட் கோல்மேன், மிட்செல்ஜான்சன் வீசிய 2 பவுன்சர்களில் பின்னுக்குத் தள்ளப்பட்டு பிறகு ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளருக்கான கோணத்தில் வீசிய பந்தை எட்ஜ் செய்தார். ஸ்காட்லாந்து வீரர்கள் 3 பேர் பூஜ்ஜியம்.

மெக்லியாட் (22), மச்சன் (40) ஆகியோர் மட்டுமே முதல் 6 விக்கெட்டுகளில் இரட்டை இலக்கை எட்டினர். 79/7 என்ற நிலையில் 100 ரன்களுக்குள் ஸ்காட்லாந்து கதை முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டேவி (26), லீஸ்க் (23) ஆகியோரது தைரியமான பேட்டிங்கினால் ஸ்கோர் 130 ரன்கள் வந்தது. கடைசியில் டேவி, வார்ட்லா ஆகியோர் மிட்செல் ஸ்டார்க்கின் 2 யார்க்கர்களுக்கு ஸ்டம்பை இழந்தனர்.

ஸ்டார்க் 4, கமின்ஸ் 3, வாட்சன், ஜான்சன், மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட்.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் மைக்கேல் கிளார்க், பின்ச் தொடக்கத்தில் களமிறங்கினர். அதிரடி முறையில் கிளார்க் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 47 ரன்கள் எடுத்தார். வார்ட்லா பந்தில் ஆட்டமிழந்தார். முன்னதாக ஏரோன் பின்ச் 10 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கிளார்க், வாட்சன் இணைந்து 9 ஓவர்களில் 58 ரன்கள் எடுத்தனர். வாட்சன் 24 ரன்களில் டேவி பந்தில் வெளியேறினார். பாக்னர் 16 ரன்களுடனும் வார்னர் 6 பந்தில் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 21 ரன்கள் எடுத்தும் வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.

ஆட்ட நாயகனாக மிட்செல் ஸ்டார்க் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x