Published : 04 Mar 2015 06:44 PM
Last Updated : 04 Mar 2015 06:44 PM
டெஸ்ட் போட்டியின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோனின் பவுன்சரில் மூக்கில் அடிபட்டது தன்னை உலுக்கி விட்டது என்கிறார் பிராட்.
நடப்பு உலகக்கோப்பை போட்டிகளில் சரியாக ஆடாததன் காரணமாக கடும் விமர்சனங்களைச் சந்தித்து வரும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பிராட், வருண் ஆரோன் பந்தில் அடி வாங்கியது இன்னும் தன் கனவில் அச்சுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு இந்தியா பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் 4-வது டெஸ்ட் போட்டியில், ஓல்ட் டிராபர்ட் மைதானத்தில் வருண் ஆரோன் வீசிய பயங்கர பவுன்சர் ஹெல்மெட்டுக்குள் புகுந்து ஸ்டூவர்ட் பிராடின் மூக்கைப் பதம் பார்த்தது. மைதானத்தில் ரத்தம் சொட்ட சொட்ட அவர் மேலும் விளையாட முடியாமல் பெவிலியன் திரும்பினார்.
அந்த அடி குறித்து இப்போது பிராட் கூறும்போது, “இன்னும் கனவில் என்னை அந்த பவுன்சரும் அடியும் அச்சுறுத்தி வருகிறது. இன்னமும் கூட நான் கனவிலிருந்து விழிப்பு நிலைக்கு வரும்போது கூட பவுன்சரில் முகத்தில் அடிபட்டது போலவே உணர்கிறேன். தொடர்ந்து பந்துகள் எனது முகத்தை நோக்கி வருவதாகவே எனக்கு பிரமை ஏற்படுகிறது.
அந்த பவுன்சரும், அடி வாங்கியதும் எனது பேட்டிங்கை ஆழமாக பாதித்துவிட்டது. இப்போது நான் உளவியல் நிபுணரிடம் கலந்தாலோசித்து வருகிறேன். ஒரு தனிநபராக அந்த அடி என்னை உலுக்கி விட்டது.” என்றார்.
இலங்கைக்கு எதிரான மிகப்பெரிய தோல்விக்குப் பிறகு ஓய்வறையில் கொஞ்சம் கோபாவேசம் நிலவியது என்று கூறினார் பிராட்.
அடுத்ததாக வங்கதேசத்துடன் இங்கிலாந்து மோதுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT