Published : 04 Mar 2015 10:26 AM
Last Updated : 04 Mar 2015 10:26 AM
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இன்று நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவும், கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தானும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா ஒரு வெற்றியை பெற்றுள்ளது. ஓர் ஆட்டம் ரத்தான நிலையில், மற்றொரு ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோல்வி கண்டது.
இந்த நிலையில் நாக் அவுட் வாய்ப்பை தக்கவைப்பதோடு மட்டுமின்றி, தாங்கள் வலுவான அணி என்பதையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தானை வீழ்த்துவது ஆஸ்திரேலியாவுக்கு கடினம் அல்ல என்றாலும், மிகப்பெரிய வெற்றியைப் பெறுமா என்பதுதான் கேள்வியாக உள்ளது.
ஆஸ்திரேலியா வலுவான பேட்டிங் மற்றும் பந்துவீச்சைக் கொண்டிருந்தாலும், நியூஸிலாந்திடம் தோற்றது. அந்த அணியைப் பொறுத்தவரையில் பட் கம்மின்ஸ் இந்த ஆட்டத்தில் விளையாடமாட்டார். அவருக்குப் பதிலாக ஜோஷ் ஹேஸில்வுட் இடம்பெறுகிறார். மற்றபடி எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது.
உலகக் கோப்பையில் முதல்முறை யாக விளையாடும் ஆப்கானிஸ்தான் அணி, ஸ்காட்லாந்தை வீழ்த்திய உற்சாகத்தில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. அந்த அணிக்கு இந்தப் போட்டியை அக்னிப் பரீட்சை என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்த அணி ஆஸ்திரேலியாவை எப்படி சமாளிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அந்த அணியைப் பொறுத்தவரையில் எந்த மாற்றமும் இருக்காது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இந்தப் போட்டியிலும் ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்படு கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT