Published : 14 Mar 2015 03:28 PM
Last Updated : 14 Mar 2015 03:28 PM
ஜிம்பாப்வேவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற பிறகு இந்திய கேப்டன் தோனி, ஜிம்பாப்வே நெருக்கடி கொடுத்ததாக ஒப்புக் கொண்டார்.
அவர் இவ்வாறு கூறுவது ஏனெனில், தொடக்க வீரர்களே ஸ்கோரை பெரிய அளவுக்குக் கொண்டு வந்து நிறுத்துவார்கள் என்று தோனி எதிர்பார்த்துள்ளார். இதையே அவர் சூசகமாக, ‘கோலி களமிறங்கும் போதே நெருக்கடியை உணர்ந்தோம்’ என்று கூறியிருப்பதாகத் தெரிகிறது.
ஆட்டம் முடிந்த பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் தோனி கூறியதாவது:
விராட் கோலி களமிறங்க உள்ளே சென்ற போது கூட நெருக்கடியை உணர்ந்தோம். ஜிம்பாப்வே ஒரு நல்ல அணி. ஆனால் நாங்கள் வெல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பிட்சில் பந்துகள் பேட்டிற்கு விரைவாக வந்தது என்று கூற முடியாது. பந்தை லாவகமாக ரன்களாக மாற்ற போதிய வேகம் இல்லை. அணியின் கீழ்வரிசை பேட்ஸ்மென்களுக்கும் கொஞ்சம் பேட்டிங் தேவை.
5ஆம் நிலையில் ரெய்னா எங்களுக்கு மிக முக்கியமான வீரர். எனக்கும் ரெய்னாவுக்குமான கூட்டணி முக்கியமான தருணத்தில் வந்தது.
கடந்த சில போட்டிகளில் ஒவ்வொரு துறைக்கும் நெருக்கடி ஏற்பட்டது. 3 வேகப்பந்து வீச்சாளர்களாயினும் சரி, ஸ்பின்னர்களாயினும் சரி, பேட்டிங் வரிசையாயினும் சரி ஒவ்வொருவருக்கும் நெருக்கடி தருணங்களும் சவால்களும் ஏற்பட்டன. இதுதான் இருதரப்பு ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கும் உலகக்கோப்பையில் இங்கு விளையாடுவதற்குமான வித்தியாசம் என்று நான் கருதுகிறேன்.
இருதரப்பு தொடர்களில் கீழ் வரிசை பேட்ஸ்மென்களுக்கு அதிக சவால்கள் ஏற்படுவதில்லை. இதனால்தான் இத்தகைய போட்டிகள் கடினம் ஏனெனில் இங்கு கீழ்வரிசை பேட்ஸ்மென்களுக்கு பேட் செய்ய நிறைய வாய்ப்புகள் ஏற்படவில்லை.” என்றார் தோனி.
உலகக்கோப்பைக்க்கு முன்னதாக நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடருக்கும், தற்போது இந்திய அணியின் ஆட்டத்துக்கும் உள்ள வேறுபாட்டிற்குக் காரணம் என்ன என்று கேட்ட போது, “முடிவுகளை விட தயாரிப்புகள் உள்ளிட்ட திட்டமிடுதல் போன்ற நடைமுறைகளே என்று நான் கருதுகிறேன்.
மேலும், வீரர்கள் தங்கள் பொறுப்புகளை கையில் எடுத்து கொண்டு சிறப்பாகச் செயல்பட்டதும் இந்த வெற்றிகளுக்கு ஒரு காரணம்.
இப்போது 3 மாதங்களுக்கு மேலாக இங்கு இருந்து வருகிறோம். காலிறுதிக்கு முன்னதாக கொஞ்சம் பிரேக் தேவை. ஏற்கெனவே பிரேக் இருந்ததால்தான் அணி இந்த அளவுக்கு விளையாட முடிந்துள்ளது. எனவே சிறிய இடைவெளி எப்போதும் உதவும்.
ரசிகர்கள் பெரிய அளவுக்கு திரண்டு வருகின்றனர் இதுவும் ஒரு உற்சாகமளிக்கிறது.” என்றார் தோனி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT