Published : 12 Mar 2015 04:02 PM
Last Updated : 12 Mar 2015 04:02 PM
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சனிக்கிழமையன்று ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய அணியில் மாற்றமிருக்காது என்று தோனி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் அவர் தெரிவிப்பது என்னவெனில், ராயுடு, அக்சர் படேல், ஸ்டூவர்ட் பின்னி, மற்றும் புவனேஷ் குமார் ஆகியோருக்கு தற்போது 11-இல் இருக்கும் எந்த வீரராவது காயமடைந்தாலே தவிர வாய்ப்பில்லை என்பதே.
"பெஞ்ச் பலம் என்பது பெஞ்சை உயிர்ப்புடன் வைத்திருக்கட்டும்" என்று மே.இ.தீவுகளுக்கு எதிரான வெற்றியின் போதே தோனி மிகவும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இப்போது காலிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணியில் மாற்றங்கள் உண்டா என்ற கேள்விக்கு பதில் அளித்த தோனி, “இதில் உடற்தகுதி நிபுணரின் தகவல்கள்தான் எங்களுக்குத் தேவை. எந்த வீரராவது காயம் காரணமாக விளையாடவே முடியாது என்ற நிலை இருந்தால் மட்டுமே அந்த வீரருக்கு ஓய்வு அளிக்கப்படும். மற்றபடி அனைவரும் உடற்தகுதியுடன் இருக்கும்போது சிறந்த 11 வீரர்களுக்கே முதலிடம். ஏனெனில் ஏற்கெனவே போட்டிகளுக்கு இடையே நிறைய இடைவெளி உள்ளது. இந்த ஓய்வு நேரம் போதுமானது. காயம் பற்றிய இடர் இல்லையெனில் தொடர்ந்து சிறந்த 11 வீரர்களையே களமிறக்குவோம்.
பிட்ச்களுக்குத் தகுந்தவாறு நம் ஆட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்வதே வெற்றியின் ஒரு காரணி. இனி வரும் போட்டிகளில் இதுவரை ஆடிய பிட்ச்கள் போன்று இருக்காது என்றே கருதுகிறேன். ஏற்கெனவே ஹாமில்டன் பிட்ச் மற்ற பிட்ச்களை விட சற்று வித்தியாசமாக இருந்ததை கவனித்தோம்.
நியூசிலாந்தின் மற்ற பிட்ச்கள் ஆஸ்திரேலிய பிட்ச்கள் போல் இருக்கலாம். அதே வேகம் மற்றும் அதே எழுச்சி இருக்கும். மைதானம் சிறியது மற்றபடி பெரிய வித்தியாசம் இருக்காது.” என்றார்.
இதற்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் பந்துவீச்சில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய திறன் மேம்பாடு பற்றி தோனி குறிப்பிட்டிருந்தார். ஆனால், இம்முறை மீண்டும் இந்தியப் பந்துவீச்சு பற்றி கேட்ட போது, சற்றே நகைச்சுவை உணர்வுடன் அவர், “அடிவாங்கி அடிவாங்கி அவர்கள் களைப்படைந்திருக்கலாம்” என்று கூறினார், ஆனால் உடனேயே மிகவும் சீரியசான தொனியில், “பந்துவீச்சாளர்களின் மேம்பாட்டுக்கு பல காரணிகளின் கலவையே காரணம். தினசரி பயிற்சி, ஆலோசனைகளை செயல்படுத்துவதில் முனைப்பு, புதிய பவுலிங் கோச், இவ்வாறான விஷயங்களின் கலவையாக இருக்கலாம்.” என்றார்.
புதிய உத்திகளை மேற்கொள்வது பற்றி தோனி கூறும் போது, “புதிதான ஒன்றை முயற்சி செய்கிறோம் என்றால் அதன் முடிவுகள் அணிக்குச் சாதகமாக அமைவது அவசியம். அப்போதுதான் புதிய முயற்சிகளை மேற்கொள்ள முடியும். வலைப்பயிற்சியின் போது பேட்ஸ்மென்கள் சில மாற்றங்களைச் செய்து கொள்கின்றனர். அதனை சவுகரியமாகவே அவர்கள் உணர்கின்றனர்.
ஆனால் களத்தில் அதைச் செயல்படுத்தும் போது பந்துகள் மட்டையில் சிக்காமல் போகும்போது, மீண்டும் அடிப்படைகளுக்குத் திரும்புகின்றனர். மாற்றங்களுக்கு கால அவகாசம் தேவை.
பவுலர்களும் ஒரு புதிய விஷயத்தை பரிசோதித்துப் பார்க்கின்றனர், அது அவர்களுக்கு சாதகமாக அமைந்தால் அது பொறியைக் கிளப்புகிறது. ஆனால் இந்த கற்றல் என்பது அவர்கள் மனதில் எப்போதும் இருப்பது அவசியம்.” என்றார் தோனி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT