Last Updated : 30 Mar, 2015 03:23 PM

 

Published : 30 Mar 2015 03:23 PM
Last Updated : 30 Mar 2015 03:23 PM

என்னை வீழ்த்த தயாராகவே இருப்பார்கள்: மலேசிய தொடர் குறித்து சாய்னா நெவால்

இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா நெவால் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் அடுத்ததாக மலேசியாவில் நடைபெறும் தொடரை வெல்வதில் முனைப்பு காட்டிவருகின்றனர்.

500,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகை கொண்ட மலேசியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் நாளை தகுதிச் சுற்றுப் போட்டிகளுடன் தொடங்குகிறது.

இந்தியா ஓபன் சூப்பர் சீரிஸில் சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா நெவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு தங்கள் வெற்றியை கொண்டாட நேரம் இல்லை. நேற்று இரவே மலேசியா புறப்பட்டுச் சென்றனர்.

சாய்னா நெவால் ஏற்கெனவே உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார். வரும் வியாழனன்று அவர் நம்பர் 1 என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ள நிலையில், சாய்னா மலேசிய ஓபன் தொடரின் முதல் சுற்றில் இந்தோனேசிய வீராங்கனை மரியா ஃபிபே குஸுமாஸ்துதி என்ற வீராங்கனையைச் சந்திக்கிறார்.

2-வது சுற்றில் சாய்னா, தாய்லாந்து வீராங்கனை புசானன் என்ற வீராங்கனையை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா ஓபன் தொடரில் சாய்னா நெவால் காண்பித்த ஆட்டத்திறமை தொடர்ந்தால் மலேசியா ஓபன் காலிறுதியில் சீன தைபே வீராங்கனை டை சூ யிங் என்பவரைச் சந்திக்க நேரிடலாம்.

ஆனால் சீனாவின் சிறந்த வீராங்கனைகளான லி ஸ்யூருய், வாங் யிஹான் ஆகியோர் மலேசிய தொடரில் பங்கேற்பதால் இந்த முறை சாய்னா கடும் சவால்களைச் சந்திக்க நேரிடும் என்று தெரிகிறது.

இந்தத் தொடர் குறித்து சாய்னா கூறும்போது, “கடந்த 3 மாதங்களில் நான் 3 இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளேன். அதாவது நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றுதான் இதற்கு அர்த்தம். நான் எந்தத் தொடரையும் லேசானதாக நினைப்பதில்லை.

ஒவ்வொரு வீராங்கனையும் என்னை வீழ்த்தக் குறிவைத்து தயார் நிலையில் இருப்பார்கள். ஆகவே நானும் அவர்களுக்காக தயார் நிலையில் இருப்பது அவசியம்.

இந்தியா ஓபன் சூப்பர் சீரிஸ் தொடரின் ஆடவர் பிரிவு சாம்பியனான ஸ்ரீகாந்த், மலேசிய தொடரின் முதல் சுற்றில் இங்கிலாந்தின் ராஜிவ் அவுசெப் என்பவரை சந்திக்கிறார்.

கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் தொடரில் ராஜிவ் அவுசெப்பை ஸ்ரீகாந்த் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x