Published : 23 Mar 2015 12:41 PM
Last Updated : 23 Mar 2015 12:41 PM
அடுத்த கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்வதன் மூலம் நடுவர்கள் இழைத்த அநீதிக்கு தங்கள் தேச அணி பதிலடி தரும் என வங்கதேச விளையாட்டுத் துறை அமைச்சர் பிரென் சிக்தர் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் வங்கதேசம் தோல்வியடைந்து வெளியேறியது.
இப்போட்டியில் இந்திய அணிக்குச் சார்பாக நடுவர்கள் செயல்பட்டதாக வங்கதேச ஊடகங்கள் சாடியுள்ளன. தொடர்ந்து வங்கதேசத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் பரவலாக போராட்டங்கள் நடத்தினர். வங்கதேச அணியின் கேப்டனும் தனது அதிருப்தியை பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
தற்போது இது குறித்து, வங்கதேசத்தில் நடைபெற்ற கல்லூரி விழா ஒன்றில் பங்கேற்ற அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் பிரென் சிக்தர், வங்கதேசம் வெளியேறியதற்கு நடுவர்கள் இந்தியாவுக்கு சார்பாக இருந்ததே காரணம் எனக் குற்றம்சாட்டினார்.
"நடுவர்களின் நிலைப்பாடு மோசமாக இருந்தது. இது எங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி. இந்த அநீதிக்கு பதிலளிக்கும் வகையில் வங்கதேச வீரர்கள் அடுத்த உலகக் கோப்பையை வெல்ல வேண்டும்.
கடின உழைப்பின் மூலம் வலிமையான அணியாக வரலாறு படைக்க முடியும் என்பதை உலகுக்கு காண்பிக்க வேண்டும்" என பிரென் சிக்தர் பேசியுள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் இது குறித்து புகார் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசினாவும், வங்கதேசம் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டது எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT