Published : 21 Mar 2015 02:22 PM
Last Updated : 21 Mar 2015 02:22 PM
ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று அடிலெய்டில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் மோதல் போக்கைக் கடைபிடித்த வஹாப் ரியாஸ், மற்றும் ஷேன் வாட்சன் இருவருக்கும் ஐசிசி அபராதம் விதித்தது.
வாட்சனை தொடர்ந்து ‘அவமான’ படுத்திய வஹாப் ரியாஸுக்கு அவரது ஆட்டத் தொகையில் 50% அபராதம் விதித்த ஐசிசி, வாட்சனுக்கு 15% அபராதம் விதித்தது.
வஹாப் ரியாஸ் பேட் செய்த போது அவரைச் சீண்டியது மிட்செல் ஸ்டார்க், பிராட் ஹேடின், வாட்சன் ஆகியோர். அதில் ஆத்திரமடைந்த வஹாப் ரியாஸ் பந்துவீசும் போது வாட்சனை தனது இலக்காக்கினார். தொடர்ந்து அவர் அருகில் வந்து சீண்டும் விதமாக கைதட்டி வெறுப்பேற்றினார்.
வஹாப் ரியாஸ் பேட் செய்யும் போது தொடர்ந்து ஒரு 10-12 பந்துகள் அவரது மட்டையை நூலிழையில் தவறவிட்டுச் சென்றது. இதனையடுத்து வாட்சன், வஹாப் ரியாஸிடம் “உன் கையில் மட்டை இல்லை” என்று கூறியதையடுத்தே வஹாப் ரியாஸ் பந்துவீசும் போது சற்று ‘கூடுதலாக’ எதிர்வினையாற்ற நேரிட்டது.
சரிசமமாக அபராதம் விதிக்க வேண்டிய இடத்தில் 50% என்று கூடுதல் அபராதம் விதிக்கப்பட்ட வஹாப் கூறும் போது, "இது ஒரு விளையாட்டு, கேளிக்கை அவ்வளவே. வார்த்தைகளை பரிமாறிக் கொண்டோம். கடைசியில் அவருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்தேன். வாட்சன் நன்றாக ஆடினார்.
ஆட்டம் முடிந்ததும் அவருக்கு நான் கை கொடுத்ததை அனைவரும் பார்த்திருப்பீர்கள். ஆட்டத்தில் இது ஒரு பகுதி. ஆனால் ஆட்டம் முடிந்தவுடன் அனைவரும் நண்பர்களே.” என்று தனது பெருந்தன்மையைக் காட்டியுள்ளார்.
ஆனால், வாட்சன் மீது வஹாப் காட்டிய சீற்றம் மற்றும் பாய்ச்சல் ஆஸ்திரேலிய வீரர்களிடையே அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அது வாட்சன் ஆட்டத்துக்க்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருந்தது என்பதால் அவர்கள் இதனை ஏற்றுக் கொண்டதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT