Published : 25 Mar 2015 01:38 PM
Last Updated : 25 Mar 2015 01:38 PM

உலகக்கோப்பை அரையிறுதிகளில் தோற்காத ஆஸ்திரேலியா: சில புள்ளி விவரங்கள்

நாளை சிட்னியில் நடைபெறும் இந்திய-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டம் பற்றி பலவிதமான கணிப்புகள் உள்ள நிலையில் சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலிய ஆதிக்கமே அதிகம் இருப்பதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சிட்னியில் மட்டும் இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் வெற்றி விகிதம் 12-1 ஆகும்.

2008ஆம் ஆண்டு முத்தரப்பு ஒருநாள் தொடர் முதல் இறுதிப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் ஒருநாள் சதத்தை எடுக்க இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அப்போதும் தோனிதான் கேப்டன். இதுதான் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் இந்தியா பெற்ற ஒரே வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் இந்திய அணி 40 போட்டிகளில் 10-ல் மட்டுமே வென்றுள்ளது. 30 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. கடைசியாக 2012-ஆம் ஆண்டு அடிலெய்டில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது.

இதுவரை 6 உலகக்கோப்பை அரையிறுதிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா அதில் தோல்வி அடைந்ததில்லை. 1999 உலகக்கோப்பை அரையிறுதி ‘டை’ ஆனது.

இந்தியா தனது 5 உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டங்களில் 3-ல் வென்றுள்ளது.

சிட்னியில் நடைபெற்ற கடைசி 10 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா 8 போட்டிகளில் வென்றுள்ளது. 2 தோல்விகளுமே இலங்கைக்கு எதிராக பெற்றதாகும்.

2012ஆம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியா 253 ரன்கள் வெற்றி இலக்கை இந்தியாவுக்கு எதிராக சிறப்பாகத் தடுத்து வெற்றிபெற்றுள்ளது.

இந்திய அணிக்கு சாதகமான விஷயம் என்னவெனில் இந்த உலகக்கோப்பை போட்டிகளில் பேட்டிங் பவர் பிளேயில் இந்திய அணி ஒரு விக்கெட் கூட இழக்கவில்லை என்பதே.

சுரேஷ் ரெய்னாவை மிட்செல் ஜான்சன் ஒருநாள் போட்டிகளில் 51 பந்துகளில் 5 முறை வீழ்த்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் விராட் கோலியின் பேட்டிங் சராசரி 18.80. 6 இன்னிங்ஸ்களில் 94 ரன்களை மட்டுமே ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக கோலி எடுத்துள்ளார். 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு வெளியே அந்த அணிக்கு எதிராக விராட் கோலியின் சராசரி 75.14. 9 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் 2 அரைசதங்களை எடுத்துள்ளார் விராட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x