Published : 25 Mar 2015 12:24 PM
Last Updated : 25 Mar 2015 12:24 PM
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது நியூஸிலாந்து.
பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 43 ஓவர் களில் 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது. டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 43 ஓவர்களில் 298 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து, ஒரு பந்து மீதமிருக்கையில் 299 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி கண்டது.
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கர்
தென் ஆப்பிரிக்கா நியூஸிலாந்திடம் தோற்றிருந்தாலும், அதன் தோல்விக்கு முக்கியக் காரணமானவர் மற்றொரு தென் ஆப்பிரிக்கர்தான். அவர் வேறு யாருமல்ல, கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து வெற்றி தேடித்தந்த கிரான்ட் எல்லியட்தான். தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் பிறந்த எல்லியட், கல்லூரி படிப்பை முடித்த பிறகு நியூஸிலாந்துக்கு இடம்பெயர்ந்து நியூஸிலாந்து அணியில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களுக்கு அர்ப்பணம்
மைதானத்தில் இருந்த 45 ஆயிரம் நியூஸி. ரசிகர்களும் ஒவ்வொரு பந்து வீசப்படும்போதும் குரல் எழுப்பி எங்களை உற்சாகப்படுத்தினார்கள். நியூஸிலாந்து உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என நீண்ட காலமாக ஏங்கிக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன். - கிரான்ட் எல்லியட், ஆட்டநாயகன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT