Published : 07 Mar 2015 11:42 AM
Last Updated : 07 Mar 2015 11:42 AM
உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில், தனது அபாரப் பந்துவீச்சின் காரணமாக, தென் ஆப்பிரிக்க அணியை டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 29 ரன்களில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.
இதன் மூலம், உலகக் கோப்பை காலிறுதிக்கான வாய்ப்பை பாகிஸ்தான் அணி தக்கவைத்தது.
இப்போட்டியில், 47 ஓவர்களில் 232 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 33.3 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்களில் சுருண்டு தோல்வியுற்றது.
அந்த அணியின் வெற்றிக்காக போராடிய டிவில்லியர்ஸ் 77 ரன்கள் சேர்த்தார். ஆம்லா 38 ரன்களையும், டூபிளெஸ்ஸி 27 ரன்களையும் சேர்த்தனர். ஏனையோர் சொற்ப ரன்களே எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் மிகச் சிறப்பாக பந்துவீசிய முகமது இர்ஃபான், ராஹத் அலி மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சோஹாலி கான் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
பாகிஸ்தான் இன்னிங்ஸ்:
இப்போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டதால், டக்வொர்த் லூயிஸ் முறையில் 47 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்கு 47 ஓவர்களில் 232 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது.
டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்த தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பம் முதலே பாகிஸ்தான் அணிக்கு நெருக்குதல் தர ஆரம்பித்தது. 9-வது ஓவரில் துவக்க வீரர் ஷெசாத் ஆட்டமிழந்தார். தொடர்ந்த சர்ஃபராஸ், யூனிஸ் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்த பாடுபட்டது.
சிறப்பாக ஆடிவந்த சர்ஃபராஸ், டுமினி வீசிய 16-வது ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அடுத்த ஓவரிலேயே 49 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். இதற்குப் பின் மீண்டும் பாகிஸ்தான் ஆட்டம் நிதானமானது. அணியின் நம்பிக்கை நட்சத்திரமான மிஸ்பா உல் ஹக் பொறுமையாக விளையாட யூனிஸ் கான் 37 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
தொடர்ந்து ஷோயப் மக்ஸூட் 8 ரன்களுக்கும், உமர் அக்மல் 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 37-வது ஓவர் முடிவில் 175 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது.
அரை மணி நேரம் கழித்து தொடர்ந்த ஆட்டதில், அடுத்து களமிறங்கிய அஃப்ரிதி ஒரு சிக்ஸ் அடித்து தனது அதிரடியைத் துவங்க, மறுமுனையில் மிஸ்பா தனது அரை சதத்தை எட்டினார். மீண்டும் மழையால் ஆட்டம் தடைபட்டது. ஒரு மணி நேரம் வரை நீடித்த இந்த மழையால் ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
மீதம் 7 ஓவர்களே இருக்க, முடிந்த வரை அதிரடியாக ரன் சேர்க்க பாக். முயன்றது. ஆனால் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்கள் திறம்பட வீசியதால் நினைத்த வேகத்தில் ரன் சேர்க்க இயலாமல் போனது.
அஃப்ரிதி 22 ரன்களுடனும், வஹாப் ரியாஸ் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து வெளியேறினர். மிஸ்பாவும் அடுத்த ஓவரில் 56 ரன்களுக்கு விழ, தொடர்ந்து ஆட வந்த ரஹத் அலி, சோஹைல் கான் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
முடிவில் 47 ஓவர்கள் கூட முழுமையாக ஆடாத பாக். 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டக்வொர்த் லீவிஸ் முறையில் திருத்தியமைக்கப்பட்ட இலக்காக 232 ரன்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT