Published : 06 Mar 2015 04:23 PM
Last Updated : 06 Mar 2015 04:23 PM

ஆம்புரோஸ், மார்ஷல், வால்ஷ் பந்துவீச்சில் டிவில்லியர்ஸ் அடிக்க முடியுமா? - டீன் ஜோன்ஸ் கேள்வி

மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக அன்று புரட்டி எடுத்த தென்னாப்பிரிக்க கேப்டன்/பேட்ஸ்மென் ஏபி.டிவில்லியர்ஸ், பழைய மே.இ.தீவுகள் பந்துவீச்சுக்கு எதிராக இப்படி அடித்திருக்க முடியுமா? என்று கேள்வி எழுப்புகிறார் ஆஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மென் டீன் ஜோன்ஸ்.

சிட்னி மார்னிங் ஹெரால்ட் என்ற ஆஸ்திரேலிய இணையதளத்தில் பத்தி எழுதியுள்ள டீன் ஜோன்ஸ், நவீன கிரிக்கெட் ஆட்டம் சமனிலையாக இல்லை என்றும் பவுலர்களுக்கு அதிக கட்டுப்பாடுகள், ஆனால் பேட்ஸ்மென்களுக்கு அதிக சுதந்திரம் என்றும் அவர் சாடியுள்ளார்.

அந்தப் பத்தியின் கடைசியில் அவர் கூறும் போது, “கடந்த வாரம் டிவில்லியர்ஸ், நான் பார்த்ததில் மிகப்பெரிய ஒருநாள் போட்டி இன்னிங்ஸை ஆடினார். மே.இ.தீவுகளுக்கு எதிராக அவர் ஆடியது உண்மையில் நம்ப முடியாத ஆட்டமே. இதில் சந்தேகமில்லை.

இருந்தாலும், என்னால் இப்படி யோசிக்காமல் இருக்க முடியவில்லை, அதாவது, ஆம்புரோஸ், வால்ஷ், மால்கம் மார்ஷல் உள்ளிட்ட பழைய மே.இ.தீவுகள் பந்துவீச்சை டிவில்லியர்ஸ் இவ்வளவு சிறப்பாக ஆடியிருக்க முடியுமா என்பதே.. அதுவும் அப்போது கொடுக்கப்பட்ட பிட்ச் நிலைமைகள், அப்போதுள்ள பீல்டிங் விதிமுறைகள், அதாவது இவ்வளவு கட்டுப்பாடுகள் இல்லாத அந்த நிலையில் ஏ.பி.டிவில்லியர்ஸ் இப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடியிருக்க முடியுமா என்ற சந்தேகத்தை என்னால் எழுப்பாமல் இருக்க முடியவில்லை.

இருதரப்பினருக்கும் சமவாய்ப்புகள் இருக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும், ஆனால், வருத்தமளிக்கும் விஷயம் என்னவெனில் கிரிக்கெட் ஆட்டம் பேட்ஸ்மென்களுக்குச் சாதகமாக அதிக அளவில் மாற்றமடைந்துள்ளது.

நடப்பு உலகக்கோப்பை போட்டிகளில், 27 போட்டிகளில் 19 முறை அணிகள் 300க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளது. இருமுறை 400 ரன்களுக்கும் மேலும் சென்று விட்டது. 6 பேட்ஸ்மென்கள் 150 ரன்களை எட்டியுள்ளனர். குறிப்பாக முதல் இன்னிங்ஸ்களில். கடைசி ஓவர்களில் சராசரியாகக் குவிக்கப்பட்ட ரன்கள் 100 என்பது மிகப்பெரியது.

தற்போதைய விதிமுறைகள், பேட்டிங் பிட்ச்கள், அடர்த்தியான பேட்கள் ஆகிய சூழ்நிலையில் வாசிம் அக்ரம், ஆம்புரோஸ், கார்னர், மார்ஷல், வக்கார் யூனிஸ், டெனிஸ் லில்லி, உட்பட மிகப்பெரிய பவுலர்கள் கூட சிறப்பாக வீசியிருக்க முடியுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் ஆட்டம் பேட்ஸ்மென்களுக்கு சாதகமாக நிலவி வருகிறது. இந்த நிலை மாற வேண்டும்.” என்று கூறியுள்ளார் டீன் ஜோன்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x