Published : 13 Feb 2015 05:41 PM
Last Updated : 13 Feb 2015 05:41 PM
உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதில்லை என்ற வரலாறு ஒரு புறம் இருந்தாலும் ஞாயிறன்று நடைபெறும் இரு அணிகளுக்கு இடையிலான போட்டி ஒரு புதிய போட்டியே என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் டி20 கிரிக்கெட் தொடரையொட்டி சிறப்பு விருந்தாளியாகக் கலந்து கொண்ட கவுதம் கம்பீர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பற்றி கூறும்போது, “எந்த அணி சிறப்பான, சீரான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்துகிறதோ அந்த அணி உலகக்கோப்பையை வெல்லும். பெரிய தொடரான இதில் 2 அணிகளைக் குறிப்பிட்டு இவர்கள்தான் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது என்றெல்லாம் கூறுவதற்கில்லை.
எந்த அணியாக இருந்தாலும் காலிறுதி, அரைஇறுதி, இறுதி என்ற அந்த 3 நாட்கள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதே முக்கியம்.
கிரிக்கெட் ஆட்டம் என்பது நிச்சயமின்மைகளுக்கான விளையாட்டு, முன்கணிப்பு செய்வது பற்றி எனக்கு நம்பிக்கை இல்லை. கடந்த உலகக்கோப்பைப் போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடியுள்ளது, அனைத்துப் போட்டிகளிலும் வென்றுள்ளது. பாகிஸ்தான் ஒரு நல்ல அணி. எனவே இந்த முறை நடைபெறுவது ஒரு புதிய போட்டியே.
இரண்டு முனைகளிலும் புதிய பந்து என்பதால் தொடக்க வீரர்களுக்கு, குறிப்பாக ஆஸ்திரேலிய, நியூசிலாந்து மைதானங்களில் நெருக்கடி ஏற்படும். நல்ல தொடக்கமும், விக்கெட்டுகளை விரைவில் இழக்காமலும் ஆடுவது அவசியம்.
இந்திய அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று அனைத்திலும் சிறப்பாகத் திகழ்ந்தால்தான் கோப்பையை வெல்ல முடியும்.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT