Published : 28 Feb 2015 03:16 PM
Last Updated : 28 Feb 2015 03:16 PM
நியூசிலாந்துக்கு எதிராக த்ரில்லரில் தோல்வி அடைந்தது ஆஸ்திரேலியா. தோல்விக்குக் காரணம் மோசமான பேட்டிங்கே என்று ஆஸி. கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் பரபரப்பான முறையில் நியூசி. வெற்றி பெற்றது.
மிட்செல் ஸ்டார்க் அபாரமாக வீசி ஏறக்குறைய தனிநபராக போட்டியை ஆஸி.க்கு வெற்றி தேடி தந்திருப்பார் என்ற போதிலும், கிளார்க் இன்றைய ஆஸி. பேட்டிங்கை மன்னிக்கும் மனநிலையில் இல்லை. 80/1 என்ற நிலையிலிருந்து 106/9 என்ற மோசமான நிலைக்கு ஆஸி. சரிந்தது.
“டி20 கிரிக்கெட்டிலும் சரி, ஒருநாள் கிரிக்கெட்டிலும் சரி பவர் ஹிட்டிங் மீது சில வேளைகளில் அதீத கவனம் செலுத்தப்படுகிறது என்று நான் கருதுகிறேன்.
புதிய பந்தில், ஸ்விங் ஆகும் தருணங்களில் சிறப்பாக ஆடுவது பற்றிய கவனம் பயிற்சிகளின் போது இல்லை என்றே நான் கருதுகிறேன். நியூசிலாந்தில் மட்டுமல்ல உலகின் எங்கு சென்று ஆடினாலும் புதிய பந்தில் ஸ்விங் இருக்கவே செய்யும், எனவே அதனை ஒருவாறு சமாளித்து பிறகு அடிக்கத் தொடங்கும் பயிற்சி முறையே சிறந்தது.
அடுத்த போட்டியில் பெர்த்தில் ஸ்விங் ஆகும், பிரிஸ்பனில் ஸ்விங் ஆவதை அனுபவித்திருக்கிறோம். மெல்போர்ன், சிட்னி என்று ஸ்விங் ஆகும். ஆகவே பேட்டிங்கில் இன்னும் சில விஷயங்களுக்கு நாங்கள் தீர்வு காண வேண்டியுள்ளது.
இந்த இடத்தில் நாங்கள் மிக மிக மோசமாக இருக்கிறோம் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. ஷாட் தேர்வு மிக மோசம், அனைத்தையும் விட தடுப்பாட்ட உத்தி மற்றெல்லாவற்றையும் விட மோசமாக உள்ளது.
இன்னும் ரன்கள் தேவை, நான் உட்படவே சேர்த்தே கூறுகிறேன். இன்று மிகுந்த ஏமாற்றமாக உள்ளது. என்னுடைய ஷாட் தேர்வும் மோசமே.
151 ரன்களை வெற்றிகரமாக தடுத்து விட முடியும் என்றே உறுதியாக நினைத்தேன். நான் அவர்களிடம் தெளிவாகக் கூறிவிட்டேன். ‘151 ரன்கள் போதுமானது மீதியை நீங்கள்தான் செய்ய வேண்டுமென்று’.
இவ்வாறு கூறினார் மைக்கேல் கிளார்க்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT