Published : 26 Apr 2014 12:11 PM
Last Updated : 26 Apr 2014 12:11 PM
சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் தெற்கு ரயில்வே-சென்னை சுங்கத்துறை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ரயில்வே ஸ்டிரைக்கர் ரிஜு கடுமையாகப் போராடி ஒரு கோல் அடித்து அந்த அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.
சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டிகள் சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தெற்கு ரயில்வேயும் சென்னை சுங்கத்துறை அணியும் மோதின. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங் களில் சுங்கத் துறை ‘லெப்ட் விங்கர்’ பாரதிராஜா கோல் கம்பத்தின் அருகில் பந்தை எடுத்துச் சென்ற போது, அதை முறியடிக்க முயன்ற ரயில்வே தடுப்பாட்டக்காரர் மெய்யப்பன் கோல் கம்பத்தை நோக்கி பந்தை அடித்தார். ஆனால் பந்து கோல்கம்பத்தில் பட்டு வெளியில் சென்றதால் மயிரி ழையில் “ஓன் கோல்” தப்பியது.
முதல் பாதியில் கோல் இல்லை
இதன்பிறகு ரயில்வே அணிக்கு கிடைத்த கோல் வாய்ப்பில் ஸ்டிரைக்கர் இளமுருகன் கோல் கம்பத்துக்கு மேலே பந்தைத் தூக்கியடிக்க, சுங்கத்துறை ஸ்டிரைக்கர் ரமேஷுக்கு கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது கோல் கீப்பர் ஜேசிர் முகமது பந்தை முறியடிக்கும் முயற்சியில் கீழே விழுந்த நிலையில், ரமேஷ் பந்தை வெளியில் அடித்து வீணடித்தார். இதன்பிறகு இரு அணிகளும் பெரிய அளவில் கோலடிக்க முயற்சிகள் எடுக்காமல், மாறி மாறி பந்தை மட்டுமே கடத்திக் கொண்டிருந்தன. இதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 65-வது நிமிடத்தில் சுங்கத்துறை அணி ஆட்டத்தின் முதல் கோலை அடித்தது. மிட்பீல்டில் இருந்து பாரதிராஜா “பாஸ்” செய்த பந்தை வேகமாக முன்னோக்கி எடுத்துச் சென்று கோலடித்தார் ரமேஷ்.
இதன்பிறகு கோல் கம்பத்தின் வலதுபுறம் பந்தை எடுத்துச் சென்ற ரயில்வே ஸ்டிரைக்கர் ரிஜு, தனக்கு பின்னால் இருந்த மிட்பீல்டர் சிராஜுதீனுக்கு பந்தை பின்னோக்கி (பேக் ஹீல்ஸ்) அடித்தார். ஆனால் சிராஜுதீன் சற்று வேகமாக பந்தை உதைக்க, அது கோல் கம்பத்துக்கு மேலே பறந்தது. இதனால் நல்ல கோல் வாய்ப்பு நழுவிப்போனது
ரிஜு கோல்
எனினும் அடுத்த சில நிமிடங் களில் (அதாவது 75-வது நிமிடம்) தனது தவறை ஈடுகட்டினார் சிராஜுதீன். ரயில்வே அணிக்கு கார்னர் கிக் வாய்ப்பு கிடைக்க, இடது முனையில் இருந்து பந்தை உதைத்தார் சிராஜுதீன். மிகத்துல்லியமாக கோல் கம்பத்துக்கு வந்த அந்த பந்தை சுங்கத்துறை கோல் கீப்பர் அருண் பிரதீப் முறியடிக்க, அவர் கையில் இருந்து தவறிய பந்து, வலது புறத்தில் இருந்த ரிஜுவை நோக்கி சென்றது.
தரையை அடைவதற்கு முன்னதாகவே பந்தை மிகத்துல்லியமாக கோலாக்கினார் ரிஜு. ரிஜுவின் இடத்தில் வேறொருவர் இருந்திருந்தால் அந்த கோல் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலையை எட்டியது. அதுவே போட்டியின் முடிவாகவும் அமைந்தது.
ஆட்டம் மந்தமாக இருந்தாலும், அபாரமாக ஆடி அனைவரையும் ரசிக்க வைத்த ரிஜு ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் ரயில்வே அணியுடன் ஒப்பிடுகையில் சுங்கத்துறை கொஞ்சம் நன்றாகவே விளையாடியது.
ரயில்வே அணியில் ஸ்டிரைக்கர் ரிஜு அபாரமாக ஆடினாலும், மற்றொரு ஸ்டிரைக்கர் இளமுருகன் ஆடவில்லை. இதனால் ரிஜு தனி ஆளாக கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. இதேபோல் மிட்பீல்டில் சிராஜுதீன், சார்லஸ் ஆனந்த்ராஜ், பின்களத்தில் சந்தோஷ்குமாரைத் தவிர மற்றவர்களின் ஆட்டம் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை.
ரயில்வே வீரர்களின் திறன் ஆட்டத்துக்கு ஆட்டம் மங்கி வருவதுபோல்தான் தோன்றுகிறது. சென்னை லீக்கின் முதல் ஆட்டத்தில் அவர்களிடம் இருந்த உத்வேகம் இப்போது குறைந்திருப்பதைக் காணமுடிகிறது.
ரயில்வே அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 டிராவுடன் 8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. அதேநேரத்தில் சுங்கத்துறை அணி 4 ஆட்டங்களில் ஒரு வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வி என 4 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.
முன்னதாக நடைபெற்ற முதல் டிவிசன் போட்டியில் சேலஞ்சர்ஸ் யூனியன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் நேதாஜி அணியைத் தோற்கடித்தது.
இன்றைய ஆட்டங்கள்
முதல் டிவிசன்
ஸ்போர்ட்டிங் ஸ்டார்- வருமான வரித்துறை
நேரம்: பிற்பகல் 2.15
சீனியர் டிவிசன்
ஏரோஸ் எப்.சி.-சாய்
நேரம்: மாலை 4.15
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT