Published : 18 Feb 2015 10:30 AM
Last Updated : 18 Feb 2015 10:30 AM
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் யுவராஜ் சிங் தேர்வு செய்யப்படாததற்கு கேப்டன் தோனி தான் காரணம் என்ற தனது தந்தையின் குற்றச்சாட்டுக்கு யுவராஜ் விளக்கமளித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் யுவராஜ் சிங் இது தொடர்பாக கூறியுள்ளது: அனைத்து அப்பாக்களைப் போல எனது அப்பாவுக்கும் என் மீது பாசம் அதிகம். எப்போதும் அவர் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுபவர்.
தோனியின் தலைமையின் கீழ் இதற்கு முன்பு விளையாடியதையும் இனி விளையாடப் போவதையும் எப்போதும் நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் யுவராஜ் சிங்கை மிக அதிகபட்சமாக ரூ.16 கோடி கொடுத்து டெல்லி டேர்டெவில்ஸ் அணி வாங்கியது. அதே சமயத்தில் அவர் இந்திய அணியில் சேர்க்கப் படாதது குறித்த தனது கோபத்தை யுவராஜின் தந்தை யோக்ராஜ் சிங் ஒரு நிகழ்ச்சியின்போது வெளிப் படுத்தினார்.
அப்போது, உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் யுவராஜ் சேர்க்கப் படாதது அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளித்தது. புற்றுநோயின் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த பிறகும் கூட யுவராஜ் இந்திய அணிக்காக விளையாடினார்.
உலகக் கோப்பை அணியில் யுவராஜ் இடம்பெறாமல் தோனி தடுத்துள்ளார். என் மகன் மீது அவருக்கு அப்படி என்ன விரோதம் என்று தெரியவில்லை. தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே யுவராஜை அணியில் சேர்த்துக் கொள்ள தோனி விரும்பவில்லை.
அணி தேர்வு விஷயத்தில் அவர் செயல்பாடுகள் மிகுந்த வருத்ததை அளிக்கிறது. இதற்கு கடவுள் நீதி வழங்குவார். தோனி தலைமையில் உலக கோப்பையை வெல்ல பிரார்த்திப்போம் என்று கூறியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT