Last Updated : 21 Feb, 2015 08:26 PM

 

Published : 21 Feb 2015 08:26 PM
Last Updated : 21 Feb 2015 08:26 PM

ஜடேஜாவுக்குப் பதில் அக்சர் படேலைச் சேர்க்க வேண்டும்: இயன் சாப்பல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பைப் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக மற்றொரு இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேலை அணியில் சேர்க்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் கூறியுள்ளார்.

இந்திய தனியார் தொலைக்காட்சி பேட்டியில் இயன் சாப்பல் கூறியதாவது:

இந்தியா வழக்கம் போல் தங்களது டாப் 6 வீரர்களுடனும், சிறந்த பந்துவீச்சுடனும் களமிறங்க வேண்டும். மேலும் ஜடேஜாவுக்குப் பதில் அக்சர் படேல் அணிக்குள் வரத்தேவையிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை ஜடேஜா ஒரு துண்டு துணுக்கான கிரிக்கெட் வீரர். இந்த உலகக்கோப்பையில் நடு ஓவர்களில் விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் மட்டும்தான் வெற்றி பெற முடியும், அந்த விதத்தில் அக்சர் படேல், ஜடேஜாவைக் காட்டிலும் உதவிகரமாக இருப்பார்.

பிட்ச் இந்திய அணிக்கு பெரிய பிரச்சினைகளைக் கொடுக்காது. இந்தியாவுக்கு நல்ல விஷயம் என்னவெனில் ரெய்னா, ஷிகர் தவன் மீண்டும் ரன்களின் வழிக்கு திரும்பியுள்ளனர். விராட் கோலி மிக முக்கியம் அவரும் நல்ல ஃபார்மில் உள்ளார். இப்போது இந்தியாவுக்கு அவசியம் தேவையானது 2 விஷயங்கள், ஒன்று தோனியிடமிருந்து நல்ல கேப்டன்சி, மற்றும் ரோஹித் சர்மாவிடமிருந்து பெரிய இன்னிங்ஸ்.

தென்னாப்பிரிக்கா ஒரு நல்ல பவுலிங் அணி அவ்வளவே. ஒருசிலர் எடுத்துச் செல்வது போல் மிக உயரிய மட்டத்திலெல்லாம் அந்த அணியின் பந்துவீச்சு இல்லை. இந்த இந்திய அணியின் பேட்ஸ்மென்கள் நினைத்தால் தென்னாப்பிரிக்க பந்துவீச்சை அடித்து நொறுக்கலாம்.” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x