Published : 09 Feb 2015 08:21 PM
Last Updated : 09 Feb 2015 08:21 PM

உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: வங்கதேசத்தை போராடி வென்ற பாகிஸ்தான்

சிட்னியில் உள்ள பிளாடவுன் ஒலிம்பிக் பார்க் மைதானத்தில் நடந்த உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்தை பாகிஸ்தான் சற்றே போராடியே வீழ்த்த முடிந்துள்ளது.

முதலில் பேட் செய்த வங்கதேசம் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் போராடி பிறகு 48.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஒரு நேரத்தில் 166/5 என்று 37-வது ஓவரில் தடுமாறியது பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் பேட் செய்த வங்கதேசம் விரைவில் 2 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தாலும் தமிம் இக்பால் (81), மஹ்முதுல்லா (83) எதிர்த்தாக்குதல் உத்தியக் கடைபிடித்து 3-வது விக்கெட்டுக்காக சுமார் 33 ஓவர்களில் 168 முக்கிய ரன்களைச் சேர்த்தனர்.

ஆனால் 109 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்த மஹ்முதுல்லா, ஷேஜாதின் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். பிறகு தமிம் இக்பாலும் யாசிர் ஷா பந்தில் பவுல்டு ஆக, 190/3 என்ற நிலையில் மொகமது இர்பானின் அபார பந்து வீச்சில் வங்கதேசம் 246 ரன்களுக்குச் சுருண்டது. ஷாகிப் அல் ஹசன் மட்டுமே 31 ரன்களை அப்போது எடுக்க முடிந்தது.

இர்பான் 9.5 ஓவர்களில் 52 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அப்ரீடி 10 ஓவர்களில் 56 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகள் கைப்பற்றவில்லை.

இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் ஷேஜாத் (5), சர்பராஸ் அகமட் (1) ஆகியோர் விக்கெட்களை மோர்டசா, ரூபல் ஹுசைனிடம் இழக்க 8 ரன்களுக்கு 2 விக். என்று தடுமாற்றம் தொடங்கியது.

ஆனால் அதன் பிறகு ஹாரிஸ் சோஹைல் (39), யூனிஸ் கான் (25) இணைந்து முதல் அரைசதக்கூட்டணி அமைத்தனர். அதன் பிறகு இன்றைய தின பாக். நாயகன் ஷோயப் மக்சூத் (93 ரன்கள் 90 பந்துகள் 9 பவுண்டரி 2 சிக்சர்), உமர் அக்மல் (39 ரன், 41 பந்து 3 பவுண்டரி 1 சிக்ஸ்) இணைந்து 63 ரன்களை 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

மக்சூத் நிற்க உமர் அக்மல், மிஸ்பா (10) ஆட்டமிழக்க வங்கதேசத்திற்கு பாகிஸ்தான் 199/6 என்றான போது லேசான நம்பிக்கை வந்தது. ஆனால் அப்ரீடி களமிறங்கி 20 பந்துகளில் 24 ரன்களை எடுக்க 5 ஓவர்களில் 41 ரன்கள் சேர்க்கப்பட்டது. அப்ரீடி அவுட் ஆகும் போது 47.1 ஓவரில் 240 ரன்கள் வந்து விட்டது.

கடைசியில் மக்சூத் 93 ரன்களுடன் அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x