Published : 24 Feb 2015 04:55 PM
Last Updated : 24 Feb 2015 04:55 PM
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்த கிறிஸ் கெய்ல், தனக்கு உத்வேகம் அளித்தது ரோஹித் சர்மாவின் 2 இரட்டைச் சதங்களே என்று கூறியுள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இன்று கான்பராவில் கிறிஸ் கெய்ல் 16 சிக்சர்கள், 10 பவுண்டரிகளுடன் 215 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து 17 சிக்சர்கள் என்று மற்றொரு சாதனையை அவர் ஏற்படுத்தும் முயற்சியில் அவுட் ஆனார்.
இந்நிலையில் அவர் இரட்டைச் சதம் குறித்து கூறியிருப்பதாவது: “முதல் இரட்டைச் சதம் எடுத்தது பற்றி எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ரோஹித் சர்மா எப்போது ஒருநாள் கிரிக்கெட்டில் 2 இரட்டைச் சதங்களை எடுத்தாரோ அப்போது முதல் நாமும் ஒரு இரட்டைச் சதத்தை எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தது.
எனக்கு நானே கேட்டுக் கொண்டேன், ‘ஏன் சீரியசாக ஆட முடியாதா?’ என்று. இந்த இரட்டை சதத்திற்காக கடவுளுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
நான் ரன்கள் எடுக்க வேண்டும் என்று ஏகப்பட்ட ரசிகர்கள் விரும்பினர். என் செல்பேசி மற்றும் ட்விட்டர் கணக்குகளில் எனக்கு சேதிகள் வந்தவண்ணம் இருந்தன.
இப்படிப்பட்ட நெருக்கடியை நான் இதுவரை என் வாழ்நாளில் கண்டதில்லை. கடைசியில் அவர்கள் பேசுவதற்கு ஒரு இன்னிங்ஸை ஆடிக் கொடுத்து விட்டேன்.
தொடக்கத்தில் கொஞ்சம் மந்தமாக இருந்தது. பிட்சில் பந்துகள் கொஞ்சம் தாழ்வாக வந்தன. நான் சவால் என்ற காளையின் கொம்புகளைப் பிடித்துப் போராடினேன். அதன் பிறகு பவுலரை ‘பிக்’ செய்து அடிக்கத் தொடங்கினேன்.
நான் பல சமயங்களில் காயத்தினால் அவதியுற்று வந்துள்ளேன் என்பது நிறைய பேருக்குத் தெரியாது. நானும் இனி இளம் வயதினன் அல்ல. வயது என்னுடன் சேர்ந்தே அதிகமாகி வருகிறது.
ஆனாலும், இன்று ஆடிய ஆட்டத்தின் உத்வேகத்தை நான் தவற விட விரும்பவில்லை, தென்னாப்பிரிக்கா போட்டியை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.”
இவ்வாறு கூறினார் கெய்ல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT