Published : 23 Feb 2015 05:31 PM
Last Updated : 23 Feb 2015 05:31 PM
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று மெல்போர்னில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அஜிங்கிய ரஹானே ஆட்டத்தை சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்து பேசியுள்ளார்.
குறிப்பாக டேல் ஸ்டெய்ன் பந்தை அவர் அடித்த சிக்ஸ், “அமர்க்களம்” என்று புகழ்ந்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
இது குறித்து அவர் கூறியதாவது:
4ஆம் நிலையில் களமிறங்கி அனாயாசமான பேட்டிங்கைக் காண்பித்தார் அஜிங்கிய ரஹானே. தடுமாற்றமற்ற பெரிய ஷாட்கள் பற்றிய ஒரு காட்சிப்பதிவு அவரது ஆட்டம். ரஹானே பெரிய ஷாட்களை ஆடும்போது, அவர் பெரிய ஷாட்டை ஆடுவது போலவே தெரியவில்லை. ஏதோ பந்தை நன்றாக டைம் செய்ய முயற்சி செய்வது போலவோ, அல்லது 30 அடி வட்டத்துக்கு வெளியே தூக்கி விடுவது போல்தான் தெரிகிறது. ஆனால் அவரது அத்தகைய ஷாட்களே சிக்சருக்கு சற்று குறைவாக பிட்ச் ஆகி பவுண்டரி செல்வதைப் பார்த்தேன். அதுவும் டேல் ஸ்டெய்னுக்கு எதிராக அவர் அடித்த சிக்ஸ் அமர்க்களமானது.” என்றார்.
நேற்றைய ஆட்டத்தின் 46-வது ஓவரில் டேல் ஸ்டெய்ன் வீசிய 5-வது பந்து சற்றே வெளியே முழு அளவில் பிட்ச் ஆக அதனை ரஹானே லாங் ஆஃப் திசையில் அடித்த சிக்ஸ் பற்றியே சச்சின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த ஷாட்டை அவர் ஆடும்போது சிக்சருக்கு ஆடியது போலத் தெரியவில்லை. அந்த உணர்வை சச்சின் மிகக் கச்சிதமாக கண்டுணர்ந்து வெளிப்படுத்தியுள்ளார்.
மகிழ்ச்சிதான்... ஆனால் திருப்தியடையவில்லை...
இந்திய அணியின் வெற்றிகள் குறித்து தனக்கு மகிழ்ச்சி என்று கூறிய சச்சின் டெண்டுல்கர், முழுமையான திருப்தி ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.
“இது வரை நான் பார்த்ததை வைத்து கூறினால், அந்த முதலிடத்தை நிரந்தரமாக்க அடித்தளம் அமைத்துள்ளோம். இப்போது பிரகாசமாக உள்ளது இந்திய அணி. நான் மகிழ்ச்சியடைந்துள்ளேன். ஆனால் திருப்தியடையவில்லை.
தொடர்ந்து இப்படிப்பட்ட ஆட்டத்தை நாம் வெளிப்படுத்துவது அவசியம்.
இந்திய பேட்டிங் பரிமளிக்கும் என்று நான் ஏற்கெனவே கூறியிருந்தேன், ஏனெனில் இந்த அணியினரிடத்தில் அத்தகைய திறமைகள் உள்ளதை நான் அறிவேன். நன்றாக பேட் செய்தனர். ஆனால் பினிஷிங் இன்னும் நன்றாக அமைய வேண்டும். ஆனால் ஆட்டத்தின் எந்த நிலையிலும் நம் அணி தடுமாறியதாகவோ, தென்னாப்பிரிக்கா நம்மை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகவோ நான் கருதவில்லை. நின்று பிறகு தளர்வான பந்துகளை அடிப்பது என்ற உத்தியைக் கடைபிடித்தனர்.
ஷிகர் தவன் முதல் 2 போட்டிகளில் அபாரமாக ஆடினார். தொடர்ந்து அவர் இத்தகைய ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றே நான் நம்புகிறேன். இப்போது ஷிகர் தவன் உலகின் உச்சியில் இருக்கும் உணர்வில் இருப்பார். தன்னம்பிக்கை அவருக்கு உச்சத்தில் இருக்கும். நான் ஏற்கெனவே அவர் தாக்கம் ஏற்படுத்தும் வீரர் என்று கூறியிருந்தேன்.” என்றார். சச்சின் டெண்டுல்கர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT