Published : 14 Feb 2015 12:02 PM
Last Updated : 14 Feb 2015 12:02 PM

உலகக்கோப்பை: மெக்கல்லம், கோரி ஆண்டர்சன் அதிரடியில் நியூசி.க்கு மிகப்பெரிய வெற்றி

கிறைஸ்ட் சர்ச்சில் நடைபெற்ற உலகக்கோப்பை ஏ-பிரிவு ஆட்டத்தில் இலங்கையை 98 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தி அபார வெற்றி பெற்று முதலில் 2 புள்ளிகளைப் பெற்றது.

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் அஞ்சேலோ மேத்யூஸ் முதலில் பீல்ட் செய்ய முடிவெடுத்தார். நல்ல பேட்டிங் ஆட்டக்களத்தில் அவர் பேட்டிங் எடுத்திருக்க வேண்டும் ஆனால் ஏனோ நியூசி.யை பேட் செய்ய அழைத்தார்.

நியூசிலாந்து அணி மெக்கல்லம் (65), கேன் வில்லியம்சன் (57), கோரி ஆண்டர்சன் (75) ஆகியோரது பங்களிப்பின் மூலம் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 331 ரன்கள் எடுத்தது.

இலங்கை தரப்பில் மலிங்கா சுத்தமாக சோபிக்கவில்லை, அவர் 10 ஓவர்களில் 84 ரன்களை விட்டுக் கொடுத்தார். விக்கெட்டுகள் இல்லை. குலசேகரா 8 ஓவர்களில் 78 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஹெராத் மட்டுமே 9 ஓவர்களில் 37 ரன்களை சிக்கனமாக விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணி நிதானமாக தொடங்கினாலும் 124 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையிலிருந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய 46.1 ஓவர்களில் 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. திரிமானி அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார்.

சவுதீ, போல்ட், மில்ன, வெட்டோரி, கோரி ஆண்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

மெக்கல்லம் அதிரடி தொடக்கம்; மலிங்கா ரன் தானம்

மெக்கல்லம் முதல் ஓவரில் ஒரு பவுண்டரி அடிக்க பிறகு மார்டின் கப்திலே குலசேகராவை 2 பவுண்டரிகளை 5-வது ஓவரில் அடித்தார். அந்த ஓவரில் 13 ரன்கள் வந்தது. மெக்கல்லம் அதன் பிறகு தாறுமாறாக அடிக்கத் தொடங்க முதல் 10 ஓவர்களில் 77 ரன்கள் விளாசப்பட்டது.

ஆட்டத்தின் 8-வது ஓவரில் மெக்கல்லம் அடிக்கத் தொடங்கினார். மலிங்கா லெக் திசையில் சாதாரண பந்தை போட அதனை பவுண்டரிக்கு அனுப்பினார். அடுத்த பந்தே நோ-பால், அதுவும் லெக் திசை, அதுவும் பவுண்டரி.

அடுத்ததான ஃப்ரீ ஹிட்டில் லாங் ஆனில் மிகப்பெரிய சிக்சர் அடித்தார் அதுவே ஆட்டத்தின் முதல் சிக்சர். பிறகு கடைசி 2 பந்துகளில் 2 பவுண்டரிகள் விளாசப்பட்டது. மொத்தம் அந்த ஓவரில் 23 ரன்கள். மலிங்கா 4 ஓவர்களில் 46 ரன்களை விட்டுக் கொடுத்தார். பிறகு 35 பந்துகளில் மெக்கல்லம் அரைசதம் கண்டார். பிறகு மேலும் சில பவுண்டரிகள் விளாசப்பட 14-வது ஓவரில் நியூசிலாந்து 100 ரன்களை எட்டியது.

16-வது ஓவரில் பிரெண்டன் மெக்கல்லம் 65 ரன்களை 49 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் எடுத்திருந்த போது ஹெராத் வீசிய பந்தை மேலேறி வந்து லாங் ஆஃபில் தூக்கி அடித்தார். பந்து சிக்சர் செல்கிறது என்ற நினைத்த நேரத்தில் ஜீவன் மெண்டிஸ் அபாரமான கேட்சைப் பிடித்தார்.

நியூசிலாந்து 111/1 என்று 16-வது ஓவரில் இருந்தது.

சங்கக்காரா விட்ட கேட்ச்:

அதன் பிறகு கேன் வில்லியம்ஸ் இறங்கினார். 17-வது ஓவரில் சுரங்க லக்மல் வீச அழைக்கப்பட்டார். அப்போது லக்மல் வீசிய பந்தை கேன் வில்லியம்சன் பின்னால் சென்று ஆடுவதற்குப் பதிலாக காலை முன்னால் நகர்த்தி ஆட பந்து விளிம்பில் பட்டு சங்கக்காராவிடம் கேட்சாகச் சென்றது. சங்கக்காரா வலது புறம் டைவ் அடித்து முயன்றார் முடியவில்லை. கேன் வில்லியம்சன் அப்போது ரன் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு அவர் 67 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 57 ரன்கள் எடுத்தார்.|

11-வது ஓவரிலிருந்து 40வது ஓவர் வரை இலங்கை ஓவருக்கு 5.07 என்று மட்டுப்படுத்தி 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியது. இடையில் மார்டின் கப்தில் 49 ரன்களுக்கு சுரங்க லக்மல் பந்தில் அவுட் ஆனார். குறிப்பாக பவர் பிளேயிற்கு முன்னதாக 34-வது ஓவரில் வில்லியன்சன், டெய்லர் (14) ஆகிய இருவரையும் லெக் ஸ்பின்னர் ஜீவன் மெண்டிஸ் வீழ்த்தினார். ஆனால் ஜீவன் மெண்டிஸுக்கு கொடுக்கப்பட்ட ஓவர் வெறும் 2 ஓவர்கள் மட்டுமே, அவர் 5 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

40வது ஓவரில் நியூசிலாந்து 229/4 என்று இருந்தது. அப்போது ஆண்டர்சன் 18 ரன்களுடனும் எலியட் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஆனால் கடைசி 10 ஓவர்களில் 102 ரன்கள் விளாசப்பட்டது. 44-வது ஓவரில் எலியட் 29 ரன்களில் அவுட் ஆனார். ஆண்டர்சன் 43 ரன்களில் இருந்த போது ஜீவன் மெண்டிஸ் கையில் வந்த கேட்சை கோட்டை விட்டார். கவர் திசையில் எளிதான கேட்ச் அது. வெறுப்படைந்த பவுலர் சுரங்க லக்மல். அந்த ஓவரில் ஆண்டர்சன் 17 ரன்களை விளாசினார்.

குலசேகரா வீசிய 48-வது ஓவரில் 15 ரன்கள். மலிங்கா வீசிய 49-வது ஓவரில் 10 ரன்கள், குலசேகரா வீசிய கடைசி ஓவரில் 12 ரன்கள். ஆண்டர்சன் 46 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 75 ரன்கள்.

நிதானத் தொடக்கத்திற்குப் பிறகு சுருண்ட இலங்கை

இலங்கை அணியில் தில்ஷன், திரிமானி நிதானப்போக்கை கடைபிடித்து 13 ஓவர்களில் 67 ரன்களை தொடக்க விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். தில்ஷன் ஆக்ரோஷாமாக ஆட முடியவில்லை 41 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 24 ரன் எடுத்த நிலையில் வெட்டோரி பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

திரிமானி அபாரமாக ஆடிவந்தார். சில அற்புதமான பவுண்டரிகளை அடித்தார். அவர் 60 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட்டின் பந்தை குழப்பத்துடன் ஆடி பவுல்டு ஆனார். அதற்கு அடுத்த போல்ட்டின் ஓவரில் சங்கக்காராவும் போல்ட்டின் அருமையான பந்துக்கு எல்.பி.ஆகி 39 ரன்கள்எடுத்து வெளியேறினார். இடையே டேனியல் வெட்டோரி, ஒரு பந்தை கடுமையாகத் திருப்ப மகேலா ஜெயவர்தனே எட்ஜ் செய்து 0-வில் வெளியேறினார்.

22-வது ஓவரில் 124/1 என்று இருந்த இலங்கை 24-வது ஓவரில் 129/4 என்றும் 32-வது ஓவரில் 168/6 என்றும் சரிந்தது. இதில் மேத்யூஸ் மட்டுமே 46 ரன்கள் எடுத்து ஆடி வந்தார். அவரும் 8-வது விக்கெட்டாக 42-வது ஓவரில் வெளியேற இலங்கை கதை முடிந்தது.

ஆட்ட நாயகனாக ஆல்ரவுண்டர் கோரி ஆண்டர்சன் தேர்வு செய்யப்பட்டார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x