Published : 14 Feb 2015 06:16 PM
Last Updated : 14 Feb 2015 06:16 PM

ஜேம்ஸ் ஆண்டர்சனின் சர்ச்சைக்குரிய ரன் அவுட்: நடந்தது என்ன?

மெல்போர்னில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் பிரிவு ஏ ஆட்டம் இன்று இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனின் சர்ச்சைக்குரிய ரன் அவுட் தீர்ப்புடன் முடிந்தது.

98 ரன்களில் ஆடிவந்த ஜேம்ஸ் டெய்லர், ஒரு ஆறுதல் சதத்திற்காகவும், இருக்கும் ஓவர்களில் ஆஸ்திரேலிய பவுலர்களை மேலும் சில ஷாட்களை ஆடிக் காய்ச்சவும் தீர்மானித்திருந்த போது 42-வது ஓவரை ஜோஷ் ஹேசில்வுட் வீசினார்.

அந்த ஓவரின் 5-வது பந்து ஃபுல்லாக மிடில் அண்ட் லெக் ஸ்டம்புக்கு வந்தது. பிளிக் செய்ய முயன்ற ஜேம்ஸ் டெய்லர் பேலன்ஸ் தவறினார். ஜோஷ் ஹேசில்வுட் உட்பட ஆஸ்திரேலிய வீரர்கள் உரத்த முறையீடு செய்ய நடுவர் அலிம் தார் அவுட் என்று தீர்ப்பளித்தார்.

ஆனால், உடனேயே ஜேம்ஸ் டெய்லர் 3-வது நடுவர் மறுபரீசிலனைக்கு முறையீடு செய்துவிட்டார். ஆனால் அலீம் தார் கொடுத்த அவுட்டை ரீப்ளே பார்த்த டிவி நடுவர் இல்லை என்று மறுதலித்தார். ஆகவே டெய்லர் நாட் அவுட்.

இதற்கிடையே பேடில் பட்டுச் சென்ற பந்தை எடுத்து கிளென் மேக்ஸ்வெல் நேராக ஸ்டம்பில் அடிக்க, ஜேம்ஸ் ஆண்டர்சன் கிரீசை அடைய முடியவில்லை. அதனை தர்மசேனா ரிவியூ செய்தார். அது அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஜேம்ஸ் டெய்லர் அது டெட் பால், டெட் பால் என்று திரும்பத்திரும்ப கூறினார், ஆனால் எடுபடவில்லை.

அலிம்தார் டெய்லருக்கு எல்.பி. என்று தீர்ப்பளித்துவிட்ட பின்னரே பந்து ‘டெட்’ ஆகிவிடுகிறது. நடுவர் கையை உயர்த்திய பிறகு ஆண்டர்சன் ரன் அவுட் ஆனாரா? அல்லது அதற்குப் முன்னரா போன்ற விஷயங்கள் கண்டுகொள்ளப்படவில்லை.

ஆஸ்திரேலிய ஊடகம் இது பற்றி கூறுகையில், மேக்ஸ்வெல் த்ரோ ஸ்டம்பைத் தாக்கும் முன்னரே அலீம்தார் டெய்லருக்கு அவுட் கொடுத்தார் என்று கூறி, எனவே ஆண்டர்சன் ரன் அவுட் கிரிக்கெட் விதிகளுக்குப் புறம்பானது என்று கூறியுள்ளது.

முழுமுற்றான ஆஸ்திரேலிய ஆதிக்க தினத்தில், கடைசியில் டெய்லர் சதம் எடுக்க முடியாமல் இந்த ரன் அவுட் தீர்ப்பு அமைந்தது சர்ச்சையைக் கிளப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x