Published : 26 Feb 2015 08:43 AM
Last Updated : 26 Feb 2015 08:43 AM
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மெல்போர்னில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இலங்கையும் வங்கதேசமும் மோதுகின்றன.
கடந்த இரு உலகக் கோப்பை போட்டிகளில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய இலங்கை அணி இந்த முறை திணறி வருகிறது. தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோல்வி கண்ட இலங்கை, 2-வது ஆட்டத்தில் கடுமையாகப் போராடியே ஆப்கானிஸ்தானை வென்றது.
இலங்கை அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே பலவீனமாகியுள்ளது. கேப்டன் மேத்யூஸ் மட்டுமே தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். எஞ்சிய பேட்ஸ்மேன்களில் யாரும் சொல்லிக் கொள்ளும் படியில்லை. மூத்த வீரர்களான தில்ஷான், குமார் சங்ககாரா ஆகியோர் தொடர்ந்து தடுமாறி வருகின்றனர். அதேநேரத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதமடித்த ஜெயவர்த்தனா, தொடர்ந்து சிறப்பாக ஆடுவாரா என்பது கேள்விக்குறியே.
பந்துவீச்சில் மலிங்கா, மேத்யூ ஸைத் தவிர எஞ்சிய வீரர்களின் செயல்பாடு சொல்லிக் கொள்ளும் படியில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 16 வைடுகளையும், ஒரு நோ பாலையும் இலங்கை வீரர்கள் வீசினர். எனவே இலங்கை அணி பேட்டிங், பவுலிங் என இரு துறைகளிலும் சிறப்பாக செயல்படாவிட்டால் வங்கதேசத்தை வீழ்த்துவது கடினமாகிவிடும்.
முதல் இரு போட்டிகளையும் நியூஸிலாந்தில் விளையாடிய இலங்கை அணி, இந்த முறை ஆஸ்திரேலியாவில் விளையாடுவதால் ஓரளவு சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கையில் களமிறங்குகிறது.
வங்கதேசத்தைப் பொறுத்த வரையில் ஷகிப் அல்ஹசன், முஷ்பிகுர் ரஹிம், மஹமதுல்லா, தமிம் இக்பால் ஆகியோர் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களின் ரன் குவிப்பு அமையும். அல்ஹசன், ரஹிம் ஆகியோர் நல்ல பார்மில் இருப்பதால் இந்தப் போட்டியில் ரன் குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சில் மோர்ட்டஸா, ரூபெல் ஹுசைன், அல்ஹசன் உள்ளிட்டோர் அந்த அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.
மெண்டிஸுக்குப் பதில் தரங்கா
இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் ஜீவன் மெண்டிஸுக்கு காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் உலகக் கோப்பை போட்டியின் எஞ்சிய ஆட்டங்களிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக உபுல் தரங்கா சேர்க்கப்பட்டுள்ளதாக அந்த அணியின் கேப்டன் மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “உபுல் தரங்கா இன்று (நேற்று) இரவுக்குள் அணியில் இணைந்துவிடுவார் என எதிர்பார்க்கிறோம். வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவரை களமிறக்குவதா வேண்டாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை” என்றார்.
இதுவரை…
இவ்விரு அணிகளும் இதுவரை 37 ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் இலங்கை 32 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. உலகக் கோப்பையில் இவ்விரு அணிகளும் இரு முறை மட்டுமே மோதியுள்ளன. 2003 உலகக் கோப்பையில் 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2011-ல் 198 ரன்கள் வித்தியாசத்திலும் வங்கதேசத்தை வீழ்த்தியுள்ளது இலங்கை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT