Last Updated : 06 Feb, 2015 10:38 AM

 

Published : 06 Feb 2015 10:38 AM
Last Updated : 06 Feb 2015 10:38 AM

1999: திணறல் திலகம் தென்னாப்பிரிக்கா

ஆயிரம் திறமைகளைக் கொண்டிருந்தாலும், ஏதோ ஒரு வகையில் அதிர்ஷ்டமும் கைகொடுத்தால்தான் வெற்றி கிடைக்கிறது. அது, 1999 உலகக் கோப்பையில் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கும் பொருந்தும். அந்த அணிக்கு எப்போதுமே ஏதோ ஒரு வகையில் அதிர்ஷ்டம் அடித்தபடி இருந்தது.

இல்லாவிட்டால், ஆஸ்திரேலியாவை விட வலுவா னதாகக் கணிக்கப்பட்ட தென்னாப் பிரிக்காவைத் தொடர்ந்து இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றிருக்க முடியாது.

தென்னைப்பிரிக்கா வலுவான அணியாக இருந்தபோதிலும், உலகக் கோப்பையை பொருத்த வரையில் அதிர்ஷ்டம் இல்லாத, அணியாகவே இருந்துவருகிறது. 1992-ல் விந்தையான மழை விதியால், அரையிறுதி வாய்ப்பைப் பறிகொடுத்தது தென்னாப்பிரிக்கா.

நீ தவறவிட்டது கோப்பையை நண்பா!

1999-ல் சூப்பர் சிக்ஸ் சுற்றில் கடைசி ஆட்டத்தில் வென்றே தீர வேண்டிய நிலையில், தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது ஆஸ்திரேலியா. ‘ஐஸ் மேன்’ எனப் பெயற்பெற்ற ஸ்டீவ் வா எப்போதும் போல் நெருக்கடியிலிருந்து அணியை மீண்டும் காப்பாற்றினார்.

272 என்னும் இலக்கை நோக்கி ஆடியபோது, 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸி. அப்போது களமிறங்கிய ஆபத்பாந்தவன் ஸ்டீவ் வா, ஆட்டமிழக்காமல் 120 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெல்ல உதவினார்.

அவர் 56 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்சினை கிப்ஸ் தவறவிட்டார். அப்போது அவரைப் பார்த்து, “நண்பா.. நீ தவறவிட்டது கேட்ச்சை அல்ல. உலகக் கோப்பையை” என்று ஸ்டீவ் வா சொன்னார். அதைப் போலவே அரையிறுதியில் தோற்று வெளியேறியது தென்னாப்பிரிக்கா.

அரையிறுதியில் தென்னாப் பிரிக்கா அணி சொதப்பி யதையும், லான்ஸ் குளூஸ்னர் என்ற அதிரடி வீரரின் ஆட்டத்தையும் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாது. ஆனால், நெருக்கடி யான கட்டங்களில், எளிதில் நெருக்கடிக்குள்ளாகி, நம்ப முடியாத வகையில் சொதப்பிவிடு வதால் கிடைத்த ‘சோக்கர்ஸ்’ என்னும் அடைமொழி இன்றளவும் தொடர்கிறது.

குளூஸ்னர், யார் எப்படிப் போட்டாலும், ராக்கெட் வேகத்தில் பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார். 4 போட்டிகளில் ஆட்டநாயகன் பரிசினைப் பெற்றார். அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றார். ஆனால் ஆஸ்திரேலி யாவுக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெறும் நிலை யில் இருந்த தென்னாப்பிரிக்கா, திடீரென்று சொதப்பி ஆட்டத்தை ‘டை’ செய்து இறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.

கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் டேமியன் ஃப்ளெமிங்கை எதிர்கொண்டார் ‘அதிரடி’ குளூஸ்னர். மறுமுனையில் கடைசி ஆட்டக்காரரான டொனால்ட். குளூஸ்னருக்கு 9 ரன்கள் மிகச் சாதாரணம் என அனைவரும் நினைத்தனர்.

அதுபோலவே, முதல் இரு பந்துகளில் பவுண்டரி அடித்து ஸ்கோரைச் சமன் செய்தார் குளூஸ்னர். 4 பந்துகளில் 1 ரன் தேவை. தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்றிவிடும் என ஆஸ்திரேலிய வீரர்களே நம்பத் தொடங்கிய நேரத்தில் அது நிகழ்ந்தது.

3-வது பந்தில் ரன் இல்லை. 4-வது பந்தை அடித்துவிட்டு, வெற்றி ரன்னுக்கா குளூஸ்னர் ஓடினார். டொனால்டோ, அவரைப் பார்க்காமல் பந்தை பார்த்தபடி இருந்தார். குளூஸ்னர் ஓடிவந்துவிட்டதைக் தாமதமாகவே பார்த்த டொனால்ட், அலறி அடித்துக்கொண்டு ஓடினார். வழியில் தடுமாறி மட்டையைக் கீழே போட்டுவிட்டார். மார்க் வா, பந்தினை பவுலரிடம் வீசினார்.

அவர் பதற்றப்படாமல் கீப்பர் கில்கிறிஸ்ட்டிடம் வேகமாக அதை உருட்டி விட்டார். அதைப் பிடித்து டொனால்ட்டை ரன்-அவுட் செய்தார் கில். ஆட்டம் சமனில் முடிந்தது. நிகர ரன் விகித அடிப்படையில் இறுதியை அடையும் வாய்ப்பை ஆஸியிடம் தென்னாப்பிரிக்கா இழந்தது. ‘சோக்கர்ஸ்’ (திணறல் திலகம்) என்ற அடைமொழி சேர்ந்துகொண்டது. இன்றுவரை அந்த அணியால் கோப்பையையும் வெல்ல முடியவில்லை. இந்தப் பட்டத்தையும் உதற முடியவில்லை.

சச்சினுக்கு வந்த சோதனை

1999 உலகக் கோப்பையை இந்தியா பெரும் நம்பிக்கையோடு எதிர்கொண்டதற்குக் காரணம் மட்டை அணியின் மும்மூர்த்தி களான சச்சின், கங்குலி, திராவிட் ஆகியோர்தான்.

இவர்களுக்குத் துணையாக சடகோபன் ரமேஷ், முகம்மது அசருதீன், அஜய் ஜடேஜா ஆகியோரும் நயன் மோங்கியாவும் ஆல்ரவுண்டர் அஜித் அகர்க்கரும் இருந்ததால் இந்தியாவின் மட்டை வலு அபாரமாகவே இருந்தது என்று சொல்ல வேண்டும்.

இத்தனை வலிமை இருந்தும் இந்தியாவால் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வெல்ல முடியவில்லை. எல்லாத் துறை களிலும் அபாரத் திறமை பெற்ற தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற தில் ஆச்சரியம் இல்லை. ஆனால் ஜிம்பாப்வேயிடம் தோற்றுப் போனதுதான் இந்தியாவின் பின்ன டைவுக்குக் காரணமாக அமைந்தது.

இந்த இரு போட்டிகளுக்கு இடையே ஒரு அசம்பாவிதம் நடந்தது. சச்சினின் அப்பா ரமேஷ் டெண்டுல்கர் காலமாகிவிட்ட செய்தி வந்தது. சச்சின் உடனே கிளம்பி மும்பைக்குச் சென்றார். ஜிம்பாப்வே போட்டியில் அவர் ஆடவில்லை.

டாஸை வென்று பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்த இந்தியா, நன்றாகவே தொடங்கினாலும் தொடர்ந்து சரியாகப் போட வில்லை. ஜிம்பாப்வே 252 ரன்களை எடுத்தது. அன்று இந்தியாவின் பெரிய வில்லன் என்றால் அது உபரி ரன்கள்தான். 21 வைட், 16 நோபால்களுடன் வந்த 51 உபரி ரன்கள் ஜிம்பாப்வேக்கு போனஸாக அமைந்தன. கடைசியில் இந்தியா 3 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

அடுத்த போட்டி கென்யாவுடன். அதற்குள் திரும்பிவிட்ட சச்சின் அந்தப் போட்டியில் சதம் அடித்தார். அடித்துவிட்டுக் கண்களில் நீர் மல்க வானத்தைப் பார்த்தார். அன்று முதல் ஒவ்வொரு சதம் அடித்த பின்பும் அதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இலங்கையுடனான போட்டியில் கங்குலியும் (183) திராவிடும் (145) அற்புதமாக ஆடியதில் இந்தியா வென்றது. தட்டுத் தடுமாறி சூப்பர் சிக்ஸுக்கும் சென்றது. ஆனால் சூப்பர் சிக்ஸில் ஐந்து போட்டிகளில் நான்கில் தோற்று வெளியேறியது.

கூட்டிக் கழித்துப் பார்க்கையில் இலங்கைக்கு எதிரான லீக் போட்டி, பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் சிக்ஸ் போட்டி ஆகிய இரண்டைத் தவிர வேறு எதிலும் இந்தியா சிறப்பாக ஆடவில்லை என்பதால் இந்தியா மறக்க விரும்பும் உலகக் கோப்பைப் போட்டிகளில் ஒன்றாக இது அமைந்துவிட்டது.

களத்தில் இயர்போனில் பேசிய குரோன்யே

உலகக் கோப்பையை வெல்லக்கூடிய வாய்ப்புமிக்க மிக வலுவான அணியாகப் பல்வேறு திட்டமிடல்களுடன் இங்கிலாந்து வந்திருந்தது தென்னாப்பிரிக்கா. இந்தியாவுடனான போட்டியில் ஸ்லிப்பில் நின்றிருந்த கேப்டன் ஹன்ஸி குரோன்யே காதில் இயர் போனைப் பொருத்தி, அதில் பயிற்சியாளபர் பாப் உல்மரின் கட்டளைகளைக் கேட்டுக்கொண்டி ருந்தார். அது கண்டறியப்பட்டு, உடனடியாக, போட்டியின்போதே அதற்குத் தடை விதிக்கப்பட்டது.

வங்கதேசம், ஜிம்பாப்வே தந்த அதிர்ச்சி

1999 போட்டிகளில், வித்தியாச மான சிகையலங்காரத்துடன் தோன்றிய ஜிம்பாப்வே வேகப் பந்து வீச்சாளர் ஹென்றி ஒலங்காவை யாரும் மறந்திருக்க முடியாது.

லீக் போட்டியில், 253 ரன் வெற்றி இலக்கை நோக்கி இந்தியா வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டிருந்தபோது, 45-வது ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியா 3 ரன்னில் தோற்கக் காரணமாக அமைந்தவர். பின்னாளில், ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்தின்போது அவரை சச்சின் துவம்சம் செய்தது வேறு விஷயம்.

இதுபோல், முதல் முறையாக போட்டியில் பங்கேற்ற வங்கதேசம், வலுவான பாகிஸ்தான் அணியை, 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தி, உலகக் கோப்பையையே வென்றது போன்ற களிப்பில் நாடு திரும்பியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x