Published : 21 Feb 2015 03:03 PM
Last Updated : 21 Feb 2015 03:03 PM
தனக்கும், டேல் ஸ்டெய்னுக்குமான நட்புறவு பற்றி விராட் கோலி விவரித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 3 ஆண்டுகள் பெங்களூரு அணிக்காக விளையாடியுள்ளோம் என்று கூறுகிறார் கோலி.
"நானும், ஸ்டெய்னும், ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக 3 ஆண்டுகள் சேர்ந்து ஆடியுள்ளோம். அப்போது முதல் எங்களிடையே நல்ல நட்புறவு உள்ளது. எப்போது அவரைச் சந்தித்தாலும் அவர் என்னை அன்புடன் கட்டியணைத்துக் கொள்வார். இது ஏதோ ஓரிரு முறை அல்ல, ஒவ்வொரு முறையும் என்னை சந்திக்கும் போது அவர் என்னைக் கட்டியணைத்து தன் அன்பை வெளிப்படுத்துவார். இரு அணிகளுக்கும் இடையே ஆட்டம் இருக்கிறது என்றாலும் எங்கள் நட்பில் எந்த வித மாற்றமும் இருக்காது.
ஆனால், ஆட்டக்களத்தில் நான் அவரை ஆதிக்கம் செலுத்த விரும்புவேன், அவர் என்னை ஆதிக்கம் செலுத்த விரும்புவார். ஆனால், இது பரஸ்பர மரியாதைக்குரிய விஷயமாகும். களத்தில், ஆட்டத்தின் வேகத்தில் ஓரிரு வார்த்தைகள் பரிமாறிக்கொள்ளப் பட்டாலும் ஆட்டம் முடிந்தவுடன் எங்கள் நட்பு மீண்டும் அதே இடத்துக்கு வந்து சேர்ந்து விடும்.
ஸ்டெய்ன் மட்டுமல்ல, தென் ஆப்பிரிக்காவின் பெரும்பாலான வீரர்களுடன் எனக்கு நல்ல நட்புறவு உள்ளது. ஆனால் டேலுடனான நட்பு சிறப்பு வாய்ந்தது.
களத்தில் அவர் முற்றிலும் வித்தியாசமான வீரர். ஆக்ரோஷமாகக் காணப்படுவார். தென் ஆப்பிரிக்காவுக்காக ஆடுகிறோம் என்பதில் அவரை விட பெருமை கொள்பவர் வேறு யாரும் இருக்க முடியாது. களத்தில் மனரீதியாக பலம் வாய்ந்தவர். கள்த்திற்கு வெளியே முற்றிலும் வேறு ஒரு மனிதர் அவர்.
எப்போதும் நகைச்சுவையுடன் பேசுவார், எப்போதும் சிரித்து கொண்டிருப்பார். அவரை தனிப்பட்ட முறையில் தெரியாதவர்களுக்கு அவரது இந்த இயல்பு புரியாது. அதாவது நானும், அவரும் கிட்டத்தட்ட ஒரே குணாதிசியம் கொண்டவர்களே.”
இவ்வாறு கூறினார் கோலி. நாளை இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மெல்போர்னில் மோதுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT