Published : 16 Feb 2015 06:54 PM
Last Updated : 16 Feb 2015 06:54 PM

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை வெற்றிகள்: உணர்ச்சிவசப்படாத தோனி

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக 6-வது வெற்றியைப் பெற்றது பற்றி தோனி பெரிய உற்சாகம் காட்டவில்லை.

போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்விகள் அனைத்தும் இதைச்சுற்றியே இருந்தது. இந்தியாவின் இந்த ஆதிக்கத்திற்கான காரணம் என்ன என்று பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பாவிடம் கேட்டதற்கு “எனக்குத் தெரியவில்லை. இவ்வாறு நடக்கிறது. இதுகுறித்து நாம் ஒன்றும் செய்வதற்கில்லை.” என்று பதிலுரைத்தார்.

தோனி இதே கேள்விக்குப் பதில் அளிக்கும் போது, “சாதனை நல்லதுதான். ஆனால், இந்த விஷயம் பற்றி பெரிதாகப் பேச எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் நாம் தோற்கும் காலம் வரலாம். இது அடுத்த உலகக்கோப்பையாக இருக்கலாம் அல்லது 4 உலகக்கோப்பை கழித்து இருக்கலாம். உலகம் இருக்கும் வரை நிச்சயம் இந்த சாதனை இருக்கப்போவதில்லை. இதனைப் பற்றி சிந்திப்பதில் எந்த வித பயனுமில்லை.

இது பற்றி பெருமையடைகிறோம். ஆனால்.... ஒன்றை நாம் நினைவில் கொள்வது நலம், இந்தியா-பாகிஸ்தான் ஆடிய ஆட்டங்களின் ஒட்டுமொத்த புள்ளிவிவரங்களைப் பாருங்கள், இந்த விஷயத்தில் நாம் மிகவும் பின் தங்கியிருப்பது தெரியவரும். உண்மையில் அவர்கள் (பாகிஸ்தான்) ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை.

உலகக்கோப்பையில் நாம் வென்றுள்ளோம், அது பெருமை சேர்க்கக்கூடியதுதான், ஆனால் ஒட்டுமொத்தமாக நாம் பார்க்க வேண்டும். பாகிஸ்தான் ஒரு அபாரமான அணி. அவர்கள் அணியில் முன்பிருந்ததைப் போன்ற வீரர்கள் தற்போது இல்லை. ஆனாலும் திறமையை வைத்துப் பார்த்தால், அவர்களிடம் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர்.” என்று நிதானத்துடன் கூறினார் தோனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x