Published : 10 Feb 2015 10:13 AM
Last Updated : 10 Feb 2015 10:13 AM
எகிப்தில் கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் ஏற்பட்ட வன்முறையில் 30 பேர் உயிரிழந்தனர்.
எகிப்து தலைநகர் கெய்ரோ வில் உள்ளது ஏர் டிஃபென்ஸ் கால்பந்து மைதானம். இங்கு எகிப்தியன் பிரிமியர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் சமலெக் மற்றும் இ.என்.பி.பி.ஐ., ஆகிய அணிகளுக் கிடையே போட்டி நடைபெற இருந்தது.
அப்போது, சமலெக் அணியின் ஆதரவாளர்கள் என்று அறியப்பட்ட 'அல்ட்ராஸ் ஒயிட் நைட்ஸ்' குழுவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் டிக்கெட் வாங்காமல் மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்தனர்.
அப்போது அவர்களை விரட்ட போலீஸார் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தினர். இதில் ஏற்பட்ட நெரிசல், மூச்சுத் திணறலால் 30 பேர் பலியாயினர். 25 பேர் காயமடைந்தனர். மைதானத்துக்கு வெளியேயும் ரசிகர்கள் வன்முறை யில் ஈடுபட்டனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கலவரத்தில் ஈடுபட்ட தாக சமலெக் அணியின் ஆதர வாளர்கள் 17 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த கால் பந்து போட்டி கால வரையறை யின்றி ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.
2012-ம் ஆண்டில் எகிப்தின் போர்ட் செட் நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் இதே போன்று வன்முறை ஏற்பட்டது. அப்போது 72 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர்.
கால்பந்தும்.. கலவரமும்..
தீவிர கால்பந்து ரசிகர்கள் உள்ள ஐரோப்பிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் கால்பந்து போட்டிகளின்போது வன்முறை களும், உயிரிழப்பும் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.
14-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஆண்ட இரண்டாவது எட்வர்ட் மன்னர் கால்பந்து போட்டி நடத்த தடைவிதித்தார். கால்பந்து போட்டியின்போது ஏற்படும் மோதல்கள் பொது அமைதிக்கு கேடு விளைவிக்கிறது என்பதே அதற்கு காரணம்.
சமீபகால வரலாற்றில் 1964-ம் ஆண்டு பெருவில் நடைபெற்ற ஆர்ஜெண்டீனா பெரு இடையிலான கால்பந்து போட்டியின்போது 328 பேர் உயிரிழந்தது பெரும் துயர சம்பவமாக அமைந்தது. 1989-ல் இங்கிலாந்தில் கால்பந்து மைதானத்தில் ரசிகர்களால் ஏற்பட்ட வன்முறையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
இந்தியாவில் கூட கொல்கத்தாவில் கால்பந்து போட்டிகளின்போது வன்முறை ஏற்பட்டுள்ளது. 1980-ம் ஆண்டு கொல்கத்தாவில் மோகன் பெகான் ஈஸ்ட் பெங்கால் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது வன்முறை, நெரிசலில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT