Published : 13 Feb 2015 10:45 AM
Last Updated : 13 Feb 2015 10:45 AM

மேற்கிந்தியத் தீவுகளை அச்சுறுத்திய ஸ்காட்லாந்து: 3 ரன்களில் கவுரவ தோல்வி

உலகக் கோப்பை பயிற்சிப் போட்டி யில் தன்னை எதிர்த்து விளையாடிய 2 முறை உலகக் கோப்பை சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகளை மிரட்டிவிட்டது கத்துக் குட்டி அணியான ஸ்காட்லாந்து.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகளின் முதல் 3 விக்கெட்டுகளை 59 ரன்களுக்குள் வீழ்த்தினர் ஸ்காட்லாந்து பந்து வீச்சாளர்கள். அதேபோன்று, 30 ஓவர்கள் வரை மேற்கிந்தியத் தீவுகளின ரன் ரேட்டை 4.55 என்ற அளவிலேயே இருக்கும்படி கட்டுக்கோப்பாக பந்து வீசினர். கடைசி 5 ஓவர்களில்தான் மேற்கிந்தியத் தீவின் ரன் ரேட் 6-ஐத் தாண்டியது.

மேற்கிந்தியத் தீவுகளின் ஸ்மித் 45, பிராவோ 43, ராம்தின் 88 ரன்கள் குவித்தனர். இறுதிக்கட்டத்தில் ரஸ்ஸல் 14 பந்துகளில் 24 ரன்களும், சமி 17 பந்துகளில் 36 ரன்களும் விளாசியதால் அந்த அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 313 ரன் குவித்தது.ஸ்காட்லாந்தின் இவான்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஸ்காட்லாந்தின் எழுச்சி

ஸ்காட்லாந்து தொடக்கம் சிறப்பாக இருந்தது. கோய்ட்ஸர்- மெக்லியாட் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 75 ரன் சேர்த்தது. மெக்லியாட் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து குறுகிய இடைவெளியில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்தன.

மறுமுனையில் கோய்ட்ஸர் 106 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார். கோல்மேன் 35 பந்துகளில் 34 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவர் ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும்.இருப்பினும், பெர்ரிங்டன் 44 பந்துகளில் 66 ரன்கள் குவித்து மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சைப் பதம் பார்த்தார்.

48 ஓவர் முடிவில் 300 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது ஸ்காட்லாந்து. கடைசி 12 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கைவசம் 4 விக்கெட்டுகள் இருந்தன. பெர்ரிங்டன் துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். கடைசி ஓவரில் 11 ரன் தேவைப்பட்ட நிலையில் 8 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. ஸ்காட்லாந்து 9 விக்கெட்டுகளை இழந்து 310 ரன் எடுத்து 3 ரன் வித்தியாசத்தில் தோல்வி யடைந்தது.

கத்துக்குட்டி அணியான ஸ்காட்லாந்து, மேற்கிந்தியத் தீவுகளின் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் பிரம்மாண்ட இலக்கைத் துரத்தி ஏறக்குறைய வெற்றி பெற்றிருக்கிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்த வெற்றி உற்சாகமிழப்பையே ஏற்படுத்தியிருக்கும்.

வங்கதேசத்தை வீழ்த்திய அயர்லாந்து

சிட்னி ஓவலில் நடைபெற்ற மற்றொரு பயிற்சிப் போட்டியில் வங்கதேசத்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்து வீழ்த்தியது.

டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அயர்லாந்தின் கட்டுக் கோப்பான பந்துவீச்சால் வங்க தேசம் 48.2 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது. அந்த அணியின் சவுமியா சர்க்கார் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார். அயர்லாந்து தரப்பில் மூனி, சோரென்ஸென் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

தொடர்ந்து பேட் செய்த அயர்லாந்து, 46.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி யின் ஜோய்ஸ் 47 ரன்கள் குவித் தார். பல்பர்னி இறுதிவரை ஆட்ட மிழக்காமல் 63 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

வங்கதேசம் தரப்பில் தய்ஜுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x