Published : 09 Feb 2015 05:56 PM
Last Updated : 09 Feb 2015 05:56 PM
கிறைஸ்ட் சர்ச்சில் நடைபெற்ற உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இலங்கையை தென் ஆப்பிரிக்கா டக்வொர்த் லூயிஸ் முறையில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா அணியில் டீவிலியர்ஸுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் ஹஷிம் ஆம்லா கேப்டனாகச் செயல்பட்டார். டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் இலங்கையை பேட் செய்ய அழைக்க அந்த அணி தில்ஷனின் 100 ரன்களுடன் 44.4 ஓவர்களில் 279/7 என்று இருந்த போது மழை வந்ததால் அந்த ஓவருடன் இன்னிங்ஸ் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
மழை ஓய்ந்து பிறகு ஆட்டம் தொடங்கிய போது தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்கு 30 ஓவர்களில் 224 ரன்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், ஆட்டம் மீண்டும் மழையால் சிறிது நேரம் நிறுத்தப்பட 25 ஓவர்களில் 188 ரன்களாக மாற்றப்பட்டது. தென் ஆப்பிரிக்கா அணி 24.3 ஓவர்களில் 188 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்று வெற்றி பெற்றது.
குவிண்டன் டி காக், ஹஷிம் ஆம்லா சிறப்பான தொடக்கம் கொடுக்க தென் ஆப்பிரிக்கா 15 ஓவர்களில் 116 ரன்களாக இருந்தது. ஆனால் 51 ரன்களுக்கு 5 விக்கெடுகளை இழந்து தோல்வியின் விளிம்பை எட்டிப் பார்த்தது. ஆனால் ரீலி ரூஸோ மற்றும் வெர்னன் பிலாண்டர் வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.
முன்னதாக அருமையான பார்மில் இருக்கும் திலகரத்ன தில்ஷன் 83 பந்துகளில் 15 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 100 ரன்கள் எடுத்தார். குறிப்பாக 69 பந்துகளில் 63 ரன்கள் என்றிருந்த தில்ஷன் அதன் பிறகு 13 பந்துகளில் 37 ரன்களை விளாசி சதம் கண்டார்.
பிறகு ஆஞ்சேலோ மேத்யூஸ் 49 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 58 ரன்கள் விளாசினார். கருண ரத்னே 46 ரன்கள் எடுத்தார். தில்ஷன், சங்கக்காரா இடையே ஒரு அரைசதக் கூட்டணியும் தில்ஷன், கருணரத்னேயிடையே மற்றொரு அரைசதக் கூட்டணியும் அமைந்தது. சங்கக்காரா 31 ரன்களில் இம்ரான் தாஹீரிடம் வீழ்ந்தார். மழை குறுக்கிடாவிட்டால் இன்னமும் 32 பந்துகள் மீதமுள்ள நிலையில் சுலபமாக 300 ரன்களை எட்டியிருக்கும் இலங்கை.
தென் ஆப்பிரிக்க அணியில் டேல் ஸ்டெய்ன் 7 ஓவர்கள் 40 ரன்கள் என்று சோபிக்கவில்லை. மோர்கெல் 8 ஓவர்கள் 40 ரன்கள் விக்கெட்டுகள் இல்லை. இம்ரான் தாஹிரும் 6 ஓவர்களில் 46 ரன்கள் விளாசப்பட்டார். கைல் அபோட் மட்டும் 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். வெய்ன் பார்னெல் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தென் ஆப்பிரிக்கா இலக்கத் துரத்திய போது ஆம்லா 40 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 46 ரன்களையும், குவிண்டன் டி காக் 55 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 66 ரன்களையும் எடுத்து 15 ஓவர்களில் 116 ரன்கள் என்ற தொடக்கத்தை கொடுத்தனர்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு லஷித் மலிங்கா பந்து வீசினார், வேகத்தில் குறைவில்லை ஆனால் யார்க்கர்கள் விழவில்லை. 4.3 ஓவர்களில் அவர் 33 ரன்கள் விளாசப்பட்டார். குறிப்பாக கடைசி ஓவருக்கு முதல் ஓவரில் இவர் கொடுத்த 13 ரன்கள் தென் ஆப்பிரிக்க வெற்றியை தீர்மானித்தது என்று கூற வேண்டும்.
ஆம்லா, டி காக் இருவரையும் ரங்கன்னா ஹெராத் வீழ்த்தினார். இதனால் டூ பிளேசி, டுமினி மீது பொறுப்பு விழுந்தது. ஓவருக்கு 8 ரன்களுக்கு மேல் தேவைப்பட்டது. அதை அறிந்த டுமினி, ஹெராத் பந்தை மேலேறி வந்து ஆட முயன்று ஸ்டம்ப்டு ஆனார். குலசேகரா, அதிரடி வீரர் டேவிட் மில்லரை 4 ரன்களில் பவுல்டு செய்ய தென் ஆப்பிரிக்க அணிக்கு 4 ஓவர்களில் 40 ரன்கள் தேவை என்ற நிலைமை ஏற்பட்டது.
அப்போதுதான் மலிங்கா ஓவரின் 3 பந்துகளில் 10 ரன்களை டு பிளேசிஸ் விளாசினார்.
அதன் பிறகு வெர்னன் பிலாண்டர், ரூசோ 3 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT