Published : 25 Feb 2015 03:17 PM
Last Updated : 25 Feb 2015 03:17 PM
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் சிறந்த வீரர் பேரி ரிச்சர்ட்ஸ், தற்போதைய கிரிக்கெட்டில் விராட் கோலி, ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆகியோரே சிறந்த பேட்ஸ்மென்கள் என்று கூறியுள்ளார்.
"தற்போதைய இந்திய பேட்டிங் வரிசையில் விராட் கோலி சிறந்த பேட்ஸ்மென் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அவர் உண்மையிலேயே திறமை வாய்ந்தவர். காசு கொடுத்து பார்க்க வேண்டுமென்றால் அது விராட் கோலியின் பேட்டிங்கையே.
ஏ.பி.டிவில்லியர்ஸ், விராட் கோலி ஆகியோர் இன்றைய கிரிக்கெட் உலகில் டாப் பேட்ஸ்மென்கள் என்பதில் சந்தேகமில்லை.” என்றார்.
பேரி ரிச்சர்ட்ஸ் பற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் மேதை சர் டான் பிராட்மேன் ஒரு முறை கூறியபோது, அப்போதைய டாப் வீரர்களான ஜேக் ஹாப்ஸ், லென் ஹட்டன் ஆகிய சிறந்த வலது கை பேட்ஸ்மென்களுடன் பேரி ரிச்சர்ட்சும் ஒப்பிடத் தகுந்தவர் என்றார்.
அஜிங்கிய ரஹானே, அல்லது ஷிகர் தவன் ஆகியோரது பேட்டிங்கையும் விராட் கோலியுடன் ஒப்பிட முடியுமா என்று கேட்ட போது, “முடியவே முடியாது, இவர்கள் இருவரும் கோலிக்கு அருகில் கூட இல்லை.
கோலி தனக்குரிய தரத்தில் சிறந்து விளங்குகிறார். அவர் இன்னிங்ஸை கட்டமைக்கும் விதம் அபாரமாக உள்ளது. சிறந்த பேட்ஸ்மென் என்று கூறப்படுவதற்கான அளவுகோல் என்னவெனில் ஒருவர் தன்னுடைய இன்னிங்ஸை எப்படிக் கட்டமைத்து எடுத்துச் செல்கிறார் என்பதே, இதனை கோலி மிக அருமையாகச் செய்து வருகிறார். அவரது பேட்டிங் இன்னும் மேம்படவே வாய்ப்பிருக்கிறது.
சச்சின் டெண்டுல்கருடன் கோலியை ஒப்பிடுவதற்கு இன்னும் கொஞ்சம் தொலைவு கோலி செல்ல வேண்டும், சச்சின் டெண்டுல்கர் கைவசம் வைத்திருந்த ஷாட்களின் வகையறாக்கள் அசாதாரணமானது.” என்கிறார் பேரி ரிச்சர்ட்ஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT