Published : 28 Feb 2015 08:37 PM
Last Updated : 28 Feb 2015 08:37 PM
நடப்பு உலகக்கோப்பையில் அசோசியேட் அணிகளின் ஆட்டம் குறித்து தோனி புகழ்ந்து பேசியதோடு அந்த அணிகளை மேம்படுத்துவது அவசியம் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
கிரிக்கெட் ஆட்டம் உலகளாவிய தன்மையை எட்ட வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வணிக நோக்கத்தை விடவும் முக்கியமானது கிரிக்கெட் ஆட்டம் எங்கு வளர்கிறது என்பதை அறுதியிடுவது. அங்கெல்லாம் கிரிக்கெட் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த நாடுகளில் கிரிக்கெட் ஆடுவதற்கான வாய்ப்புகள் கூடிவருகிறது என்பதையும் நாம் பார்க்கவேண்டும்.
எங்கேனும் சிறு தீப்பொறி இருந்தால் கூட அதனை பெருந்தீயாக மாற்ற வேண்டும், அதாவது அதன் தீவிரத்தை.
ஆப்கானிஸ்தான் அல்லது வேறு சில அணிகளை எடுத்துக் கொண்டால் கூட, அவர்கள் ஆட்டத்தில் முன்னேற்றம் இருக்கிறது. எப்போது அவர்கள் சர்வதேச தளத்தில் ஆட வந்தாலும் நன்றாகவே ஆடுகின்றனர். இதுவரை பார்த்ததில் அசோசியேட் அணிகளின் ஆட்டத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. அவர்களுக்கு வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும், அந்த நாடுகளில் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கபட்டு அவர்கள் வசதியாக விளையாடுவதை உறுதி செய்யவேண்டும்.” என்றார்.
இந்தியா உள்ளிட்ட அணிகளுடன் அசோசியேட் அணிகள் அதிகம் விளையாடுவது பற்றி தோனி கூறுகையில், “இந்தியாவுக்கு எதிராக வாய்ப்பேயில்லை. இப்போது விளையாடும் கிரிக்கெட் அட்டவணைகளின் படி ஆட வாய்ப்பில்லை. ஒரு நாளிலேயே இரண்டு ஆட்டங்கள் ஆடினால் ஒருவேளை விளையாடலாம். ஆனால் அதற்கு ஏது வாய்ப்பு?
இது கடினமான ஒன்று. நல்ல சூழ்நிலையில், அதிக வசதிகளுடன் அசோசியேட் அணிகள் ஆடுவது நல்லதுதான். கடைசியில் இது ஒரு சர்க்கஸ் போலத்தான், பல மக்கள் முன்னிலையில் ஆடவேண்டும். அந்த இடத்தில் சவாலான திறமைகளைப் பயன்படுத்த வேண்டும். அதற்கான வழிவகை செய்ய வேண்டும். ஆனால் தயவு செய்து இந்தியாவுக்கு எதிராக அல்ல...இந்திய அணி அதற்கு கொடுக்கப்பட்டுள்ள ஆட்டங்களைத் தவிர வேறு எதிலும் ஆட முடியாத நிலை உள்ளது.” என்றார்.
ஐசிசி அடுத்த உலகக்கோப்பை போட்டியில் 10 அணிகளே விளையாட வேண்டும் என்ற ரீதியில் பரிசீலித்து வருவது பற்றி தோனி கூறும்போது, “பாருங்கள் எனது மேசையில் ஏகப்பட்ட விஷயங்கள் பரிசீலிக்க உள்ளன. இதனை ஐசிசி முடிவு செய்யட்டும். ஏ.சி. அறையில் உட்கார்ந்து கொண்டு அவர்கள் முடிவு செய்யட்டும். இதற்கென்றே இருக்கின்றனர், கிரிக்கெட்டுக்கு அது நல்லதோ இல்லையோ அவர்கள் முடிவெடுக்கட்டும்.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT