Last Updated : 02 Feb, 2015 07:01 PM

 

Published : 02 Feb 2015 07:01 PM
Last Updated : 02 Feb 2015 07:01 PM

2002 லார்ட்ஸ் வெற்றி: அணி வீரர்கள் அனைவரும் சட்டையைக் கழற்ற வலியுறுத்திய கங்குலி

2002-ஆம் ஆண்டு லார்ட்ஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய மகிழ்ச்சியில் பெவிலியனில் கேப்டன் கங்குலி சட்டையைக் கழற்றி சுழற்றினார்.

அப்போது, அணி வீரர்கள் அனைவரும் சட்டையைக் கழற்றி அவர் செய்தது போல் செய்ய வேண்டும் என்று கேப்டன் கங்குலி விரும்பியதாகவும் அதனை சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட் ஆகியோர் செய்ய விரும்பவில்லை என்று இந்திய அணி மேலாளர் ராஜிவ் சுக்லா கூறியுள்ளார்.

நாட்வெஸ்ட் டிராபி முத்தரப்பு ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 325/5 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய இந்திய அணி விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்து வந்தது. அப்போது இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பில்லை என்றே கருதப்பட்டது.

ஆனால், மொகமது கயீஃப் (87 நாட் அவுட்), யுவராஜ் சிங் (69) இணைந்து 121 ரன்கள் சேர்த்தது வெற்றிக்கு வழி வகுத்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 3 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

அப்போது வெற்றிக் கணம் நெருங்குவதை பதட்டத்துடன் பெவிலியனில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த கங்குலி, வெற்றி ரன்னை கயீஃப் எடுத்தவுடன் தனது நீல நிற சட்டையைக் கழற்றி தன் தலைக்கும் மேல் சுழற்றினார்.

அதற்கு முந்தைய இந்திய தொடரில் மும்பையில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது. இதனைக் கொண்டாட இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பிளிண்டாஃப் தன் சட்டையைக் கழற்றி சுழற்றினார். அதற்கு பதிலடியாகவே கங்குலி லார்ட்ஸில் சட்டையைக் கழற்றி சுற்றினார்.

ராஜிவ் சுக்லா அது பற்றி கூறும்போது, “கங்குலி பெவிலியனிலிருந்த அனைத்து வீரர்களும் சட்டையைக் கழற்றி சுழற்ற வேண்டும் என்று விரும்பினார். ஆனால், சச்சின், திராவிட், லஷ்மண் அதற்கு இசையவில்லை. ” என்றார்.

நியூஸ்24 கிரிக்கெட் கலந்துரையாடலில் இத்தகவலை அணி மேலாளர் ராஜிவ் சுக்லா பகிர்ந்து கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x