Published : 14 Feb 2015 03:02 PM
Last Updated : 14 Feb 2015 03:02 PM
பாகிஸ்தானுக்கு எதிராக நாளை உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் போது பதட்டமான, நெருக்கடி நிலைகளை அமைதியாக எதிர்கொள்வோம் என்று இந்திய கேப்டன் தோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
போட்டிக்கு முந்தைய வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி கூறியதாவது:
இந்த அணியின் பிரமாதமான விஷயம் என்னவெனில் பதட்டத்தை எதிர்கொள்வதில் வீரர்களுக்கு அனுபவம் உள்ளது. அனைவருக்குமே அனுபவம் உள்ளது. அனைவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் சிலகாலமாக ஆடி வருபவர்களே. ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதன் மூலம் 40,000, 50,000 பார்வையாளர்களுக்கு முன்பு ஆடுவது எங்களுக்கு பெரிய பதட்டத்தை கொடுக்காது.
சிறப்பான பங்களிப்பை செய்ய வேண்டும் என்பதே தற்போதைய நோக்கம். புள்ளிவிவரங்கள், எண்கள் பற்றி எனக்கு பெரிய கவலையில்லை. தயாரிப்பைப் பொருத்தமட்டில் நன்றாகவே செய்திருக்கிறோம். பாகிஸ்தானுடன் விளையாடும் போது களத்தில் தீவிரம் இர்க்கும். மேலும், பாகிஸ்தானுடன் ஆடும் போது வீரர்கள் அனைவருமே தங்கள் ஆட்டத்தை சிறப்பாக விளையாட முனைவார்கள்.
எல்லா அணிகளுக்கு எதிராகவும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது எப்படியோ அப்படியேதான் நாளையும் நடக்கும். திட்டங்களை சரியாக நடைமுறைப் படுத்தினால் எதிரணியினருக்கு நிச்சயம் பிரச்சினைகள் ஏற்படுத்த முடியும்.
மேலும், முத்தரப்பு ஒருநாள் தொடர் மற்றும் பயிற்சி ஆட்டங்களில் ஆடியுள்ளோம், அதனுடன் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடுவதும் முக்கியமானதாக மாறியுள்ளது. இது ஹை வோல்டேஜ் ஆட்டம். இந்தியாவிலிருந்து நிறைய ரசிகர்கள் வந்துள்ளார்கள், ஹவுஸ் ஃபுல் ஆட்டமாக நாளை அமையும்.
இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை கணித்து விட முடியாது. அணியில் காயமடைந்த வீரர்கள் இல்லை.
2011 உலகக்கோப்பை அணியில் பந்துவீச்சைக் காட்டிலும் இது வித்தியாசமான பந்துவீச்சு யூனிட். உலகக்கோப்பைக்கு வருவதற்கு முன்பு இவர்களுக்கு நிறைய ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பளித்துள்ளோம். இது கைகொடுக்கும் என்றே கருதுகிறேன்.
பந்துவீச்சாளர்கள் பற்றி...
பந்துவீச்சாளர்கள் நல்ல உணர்வு நிலையில் உள்ளனர். நிறைய ரன்களை இவர்கள் விட்டுக் கொடுத்துள்ளனர் என்பது உண்மைதான், ஆனாலும் நல்ல பந்துவீச்சும் இவர்களிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கிளென் மேக்ஸ்வெல் நம் பந்து வீச்சில் ரன்கள் குவித்தார். ஆனால் அதுதான் எங்கள் திட்டத்தை மறுமதிப்பீடு செய்ய உதவியது. மொத்தத்தில் பந்துவீச்சு நல்ல நிலையில் உள்ளதாகவே நினைக்கிறேன்.
செயிண்ட் பீட்டர்ஸ் மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் யார்க்கர்களை முழு மூச்சுடன் பயிற்சி செய்தனர். மெதுவான பவுன்சர், வேகமான பவுன்சர், மெதுவான பந்துகள் என்று பல தினுசு பந்துகளையும் பயிற்சி செய்துள்ளனர்.
எங்கு நாம் வெகுவாக முன்னேற வேண்டியிருக்கிறது எனில் பவுண்டரிகள் கொடுக்காமல் பந்து வீசுவது என்பதே. குறிப்பாக முதல் 10 ஓவர்களில் பவுண்டரி பந்துகளை அளிக்கக் கூடாது.” என்றார் தோனி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT