Published : 08 Feb 2015 10:45 AM
Last Updated : 08 Feb 2015 10:45 AM
எனது குழந்தையை பார்க்கச் செல்வது மிக அவசரமான வேலையில்லை. உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் மிக முக்கியம் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.
தோனி, பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். குர்காவ்னில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அவரது மனைவி சாக்ஷிக்கு குழந்தை பிறந்தது. இது தோனியின் முதல் குழந்தையாகும்.
கடந்த இரு மாதங்களாக ஆஸ்திரேலியாவில் இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. அடுத்து உலகக் கோப்பையில் விளையாட இருக்கிறது.
எனினும் தனது குழந்தையை பார்க்க தோனி இந்தியாவுக்கு உடனடியாக வந்து செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இந்தியா வரவில்லை.
குழந்தையைவிட நாடு முக்கியம்
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்பதை தோனி தெரிவித்தார். தாயும் குழந்தையும் நலமாக இருக்கிறார் என்றும் அவர் கூறினார். அப்போது உங்கள் குழந்தையை பார்க்க உடனடியாக இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என்று தோன்றவில்லையா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அப்படி தோன்றவில்லை. கடவுள் அருளால் பெண் குழந்தை பிறந்துள்ளது. இப்போது நாட்டுக்கான கடமையில் ஈடுபட்டுள்ளதால் மற்ற விஷயங்கள் காத்திருக்கட்டும். உலகக்கோப்பை போட்டிதான் மிக முக்கியம்.
பாகிஸ்தானால் பதற்றம் இல்லை
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டி குறித்து பலரும் பல்வேறு விதமான கருத்துகளை கூறிவருகின்றனர். ஆனால், ஆஸ்திரேலியா, இலங்கை என்று மற்ற அணிகளுடன் விளையாடுவது போலத்தான் நான் இந்தப் போட்டியையும் பார்க்கிறேன்.
அவர்கள் எதிரி நாடு என்று சிந்திக்கத் தொடங்கினால், நமக்கு நாமே நெருக்கடியை அதிகரித்துக் கொள்வதாகவே அமையும். கடந்த 3 அல்லது 4 ஆண்டுகளாக களத்தில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி வந்திருக்கிறோம். கிரிக்கெட் களத்தில் விளையாட்டு தொடர்பான உணர்வுகளுக்கே மதிப்பளித்து வந்துள்ளோம். வீரர்களுக்கு இடையிலான வார்த்தை மோதல்களைக் குறைத்துள்ளோம்.
விளையாட்டை கடினமாக விளையாட நினைக்கக் கூடாது. அணி வீரர்கள் இந்தியா – பாகிஸ்தான் போட்டி குறித்து அதிகம் யோசிக்காமல் இருக்கிறோம். அதுவே சிறப்பாக விளையாட உதவும்.
ஓய்வால் புத்துணர்வு
4 டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் நமது அணி விளையாடியுள்ளது. அதன் பிறகு இப்போது கிடைத்துள்ள ஓய்வு வீரர்களுக்கு நிச்சயமாக புத்துணர்வையும், புதுத் தெம்பையும் அளித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த உலகக் கோப்பை போட்டியில் பெரும்பான்மையான அணிகள் சமபலத்துடன் உள்ளன. சமீபகாலமாக எந்த அணி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறது என்பது முக்கியமல்ல. காலிறுதி, அரையிறுதி போன்ற முக்கிய போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதே முக்கியம். கிரிக்கெட் போட்டியில் கடைசி பந்து கூட ஆட்டத்தின் முடிவை மாற்றும் என்பதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்.
யாருக்கு நெருக்கடி
2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடுவதற்கு முன்பு இதேபோன்ற தோல்வி நிலையில்தான் இந்திய அணி இருந்தது. ஆனால் சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக விளையாடிய நமது வீரர்கள் கோப்பையை வென்றார்கள். இதபோன்ற சூழ்நிலைகளில் நாம் தன்னம்பிக்கையுடன் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதுதான் முக்கியம். அந்த தகுதி எங்கள் அணிக்கு உண்டு.
கடந்த உலகக் கோப்பை இந்தியாவில் நடந்ததால் எங்களுக்கு கூடுதல் நெருக்கடி இருந்தது உண்மைதான். சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. அவர்களின் மனநிலை எங்களுக்கும் புரிந்தது. இப்போது அதேநிலையில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகள் உள்ளன என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT