Published : 28 Feb 2015 08:31 AM
Last Updated : 28 Feb 2015 08:31 AM
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெர்த்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியும் மோதுகின்றன.
பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய பலம் வாய்ந்த அணிகளை முறையே 76 மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ள இந்திய அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.
மேலும் பி பிரிவில் இந்தியா முதலிடம் பிடிக்கும் பட்சத்தில் ஏ பிரிவில் 4-வது இடத்தைப் பிடிக்கும் அணியோடு மோதும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்தியாவின் முதல் 6 பேட்ஸ்மேன்களில் ஷிகர் தவன், விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, சுரேஷ் ரெய்னா ஆகியோர் சிறப்பாக விளையாடி வந்தாலும், தொடக்க வீரர் ரோஹித் சர்மா எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை.
எனவே நாக் அவுட் சுற்றுக்கு முன்னதாக பெரிய அளவில் ரன் குவித்து பார்முக்கு திரும்புவதற்கு இந்தப் போட்டி அவருக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும்.
வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் முகமது சமி முழங்கால் காயம் காரணமாக இந்தப் போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக புவனேஸ்வர் குமார் அல்லது ஸ்டூவர்ட் பின்னி இடம்பெறலாம். மற்றபடி அணியில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது.
எமிரேட்ஸ் அணியைப் பொறுத்தவரையில் கடந்த இரு போட்டிகளில் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக முறையே 285 மற்றும் 278 ரன்கள் குவித்தபோதும், பந்துவீச்சு சரியில்லாததால் தோல்வியடைந்தது. எனவே இந்திய பேட்ஸ்மேன்களை சமாளிப்பது எமிரேட்ஸ் பவுலர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
இதுவரை…
இவ்விரு அணிகளும் இரு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்தியா முறையே 71 மற்றும் 116 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT